எம்.ஜி.ஆர். 104வது பிறந்த நாள்.. தலைவி டீம் வெளியிட்ட ஸ்பெஷல் ஸ்டில்.. டிரெண்டாகும் ஹேஷ்டேக்!
சென்னை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாளை முன்னிட்டு, தலைவி பட டீம் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை 'தலைவி' என்ற பெயரில் சினிமாவாக்கப்பட்டு வருகிறது.
ஏ.எல்.விஜய் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக, இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ்குமார்
எம்.ஜி.ஆர். ஆக, அரவிந்த்சாமி, அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரனாக மதுபாலா நடிக்கின்றனர். ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இதில் இணைந்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் சிங் தயாரிக்கின்றனர்.

மீண்டும் தொடங்கியது
இந்தப் படத்தை கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். இதுபற்றி தயாரிப்பாளர்களில் ஒருவரான, பிருந்தா பிரசாத் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். ஆனால் கொரோனா அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது.

விரும்பி நடித்தேன்
ஐதராபாத்தில் செட் அமைத்து நடந்து வந்த இதன் படப்பிடிப்பு, கடந்த மாதம் நிறைவடைந்தது. இதுபற்றி ட்விட்டரில் தெரிவித்த கங்கனா, 'வெற்றிகரமாக, எங்கள் கனவுத் திரைப்படமான தலைவி ஷூட்டிங்கை முடித்து விட்டோம். எந்த நடிகைக்கும் எளிதில் கிடைத்திடாத, அரிதான ரத்தமும் சதையுமான கேரக்டர் எனக்கு கிடைத்தது' என்று கூறியிருந்தார்.

புதிய புகைப்படம்
இந்நிலையில், எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு அரசியல் தலைவராகவும் முதல்வராகவும் பதவியேற்ற எம்ஜிஆர் லுக்கில் இருக்கும் அரவிந்த் சாமியின் புதிய புகைப்படத்தை படக்குழு வெளியிட்டது. அது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அப்படியே எம்.ஜி.ஆர்.போல் இருப்பதாக தெரிவித்தனர்.

எம்.ஜி.ஆர் பிறந்த நாள்
இந்நிலையில், எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாளை முன்னிட்டு, தலைவி பட டீம் புதிய ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளது. கங்கனாவும் அரவிந்த்சாமியும் இருக்கும் பாடல் காட்சி ஸ்டில்லான அது, வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்தப் புகைப்படம் சிறப்பாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து #Thalaivi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











