தளபதி 63: என் கதையை திருடிவிட்டு சமாதானம் செய்கிறார் அட்லி: குறும்பட இயக்குநர் புகார்
Recommended Video
சென்னை: தனது கதையை திருடியதும் இல்லாமல், அட்லி தரப்பில் தன்னை சமாதானம் செய்வதாக குறும்பட இயக்குநர் கே.பி. செல்வா தெரிவித்துள்ளார்.
பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து அட்லி தளபதி 63 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார்.
இந்நிலையில் தளபதி 63 படத்தின் கதை என்னுடையது என்று கூறி குறும்பட இயக்குநர் கே.பி. செல்வா எழுத்தாளர் சங்கத்தை அணுகியுள்ளார். இது குறித்து செல்வா நியூஸ் 18 தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

கதை
பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து நான் 265 பக்கங்கள் கொண்ட கதையை எழுதினேன். அந்த கதையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸிடம் தெரிவித்தேன். இந்நிலையில் அட்லி இந்த கதையை இயக்கும் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது குறித்து நான் நீதிமன்றத்திற்கு சென்றேன். ஆனால் அவர்களோ எழுத்தாளர்கள் சங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தனர்.

மேனேஜர்
பின்னர் அட்லியின் மேனேஜர் மற்றும் ஏஜிஎஸ் நிறுவன எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளர் ஆகியோர் என்னை தொடர்புகொண்டு கதை விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம், உங்களின் படத்தை கைவிட்டுவிடுங்கள் என்றார்கள். அவர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அதன் பிறகு கதை திருட்டு தொடர்பாக தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தேன்.

எழுத்தாளர்கள் சங்கம்
என் புகார் தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோஜ் குமார் தலைமையிலான குழு என்னிடம் விசாரித்துவிட்டு நான் எழுத்தாளர் சங்கத்தில் சேர்ந்து 6 மாதம் கூட ஆகவில்லை என்றார்கள். சங்க விதிப்படி உறுப்பினராகி 6 மாதம் கழித்த பிறகே கதை திருட்டு குறித்து புகார் அளிக்க முடியும் என்று கூறிவிட்டார்கள். அது தொடர்பாக கடிதமும் அளித்தார்கள்.

நோட்டீஸ்
எழுத்தாளர் சங்கத்தில் புகாரை ஏற்க மறுத்த பிறகு நான் மீண்டும் நீதிமன்றம் சென்றுள்ளேன். கதை திருட்டு குறித்த வழக்கு வரும் 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது என்றார் செல்வா.


Click it and Unblock the Notifications











