தளபதி 65 படத்துக்காக சம்பளத்தை குறைக்க சம்மதித்தாரா விஜய்.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
சென்னை: தனது அடுத்த படத்திற்கான சம்பளத்தில் ஒரு பெரிய தொகையை குறைக்க நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
கொரோனா பாதிப்பு காரணமாக, நடிகர்கள், இயக்குநர்கள் என பலரும் தங்களின் சம்பளத்தை குறைக்க முன் வந்துள்ளனர்.
நடிகர் விஜய் ஆண்டனியை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யும் தனது சம்பளத்தை குறைக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

பிகில் சம்பளம்
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த பிகில் படத்திற்காக நடிகர் விஜய்க்கு 30 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும், நடிகர் விஜய்யின் சம்பள விஷயத்தில் குளறுபடிகள் நடந்திருக்கிறதா? என்பதை விசாரிக்க ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. ஆனால், நடிகர் விஜய் வீடுகளில் நடத்தப்பட்ட சோனைகளில் எந்தவொரு முறைகேடும் கண்டறியப்படவில்லை என்ற தகவல் வெளியானது.

80 கோடி
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்திற்காக, நடிகர் விஜய்க்கு 80 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. லாக்டவுன் காரணமாக ஏப்ரல் 9ம் தேதி வெளியாக வேண்டிய அந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 65
நடிகர் விஜய்யின் 64வது படமான மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள ‘தளபதி 65' படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வைரலாகின்றன. இந்த படத்தில் விஜய்க்கு முதன் முறையாக தமன் இசையமைக்கப் போவதும் உறுதியானது குறிப்பிடத்தக்கது.

சம்பள குறைப்பு
நடிகர்கள் தாமாக முன் வந்து தங்களின் சம்பளத்தை குறைத்து வருகின்றனர். மேலும், தயாரிப்பாளர் சங்கமும் சமீபத்தில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அனைத்து நடிகர்களும், தங்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது சம்பளத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

100 கோடி
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி 65' படத்திற்கு நடிகர் விஜய்க்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும், அதில், 20 கோடி ரூபாயை குறைத்துக் கொள்ள நடிகர் விஜய் முடிவு செய்திருப்பதாகவும், ஆனால், தயாரிப்பு தரப்பு படத்தின் பட்ஜெட்டையும், மேலும் சில கோடிகளையும் விஜய் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

மெர்சல் தயாரிப்பாளர்
படத்தின் பட்ஜெட்டை தயாரிப்பு தரப்பான சன் பிக்சர்ஸ் குறைக்க நடவடிக்கை எடுத்தால், மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் ‘தளபதி 65' படத்தை தயாரிக்கும் நிலையும் ஏற்படும் என்ற அளவுக்கு பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்த தரப்பும் இந்த தகவலை உறுதி செய்யவில்லை. ஆனால், தயாரிப்பாளரின் நலன் கருதி தனது சம்பளத்தில் ஒரு பெரிய தொகையை நடிகர் விஜய் குறைக்க முடிவு செய்திருப்பது வரவேற்க தக்க விஷயம் என்றே கோலிவுட் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











