HBD Vijay: 2026இல் தளபதி களமிறங்கும் தொகுதி எதுன்னு தெரியுமா? உங்களோட தொகுதியா கூட இருக்கலாம் நண்பா!
சென்னை: இன்று தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் விஜய் (Vijay Birthday) தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் உச்ச நடிகராக இருந்துவரும் வேளையில், சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகிவிட்டு முழுநேர அரசியல்வாதியாக செயல்படவுள்ளேன் என தமிழக வெற்றிக் கழகத்தினை தொடங்கிய தினத்தில் அறிவித்திருந்தார். தற்போது அவரது நடிப்பில் தி கோட் படம் உருவாகி வருகின்றது. படத்தின் சி.ஜி. வேலைகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டு இருந்தாலும் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகின்றது.
அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என விஜய் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே பதற்றத்திற்கு ஆளானது.

கோபப்பட்ட விஜய்: இந்த சம்பவத்தையொட்டி நடிகர் விஜய் திமுக அரசை கடுமையாக விமர்சித்து கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுமட்டும் இல்லாமல் கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். விஜய்க்கு இன்று அதாவது ஜூன் 22ஆம் தேதி 50வது பிறந்த நாள். தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் த.வெ.க.,வினர் யாரும் ஈடுபடவேண்டாம் எனவும் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் உத்தரவிட்டுள்ளார்.
விமர்சனம்: அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்யிக்கு அரசியல்வாதியாக தனது முதல் பயணம் உறவினர்களை இழந்து ஒப்பாரி வைக்கும் மக்களுக்கு ஆறுதல் கூறத்தான் இருக்கும் என்று ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார். ஆனால் சமகால சூழல் விஜய்யை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. கள்ளக்குறிச்சிக்கு விஜய் சென்றது, இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் எனக் கூறியது என எல்லாம் அரசியல் லாபத்திற்காகத்தான் என சிலர் கூறுவதும் கேட்கத்தான் செய்கின்றது.

தேர்தல் ப்ளான்: மேலும் விஜய் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடக்கூட வாய்ப்புள்ளது எனவும் கூறுகின்றனர். கள்ளக்குறிச்சியில் விஜய் போட்டியிடுவதை வாதமாக எடுத்துக்கொண்டாலும், நடிகர் அதாவது த.வெ.க., தலைவர் விஜய் தரப்பில் ஏற்கனவே இரண்டு தொகுதிகளை ஃபிக்ஸ் செய்து அந்த இரண்டில் எதாவது ஒன்றினை தளபதி டிக் செய்தால் உடனே வேலைகளை ஆரம்பித்து விடலாம் என கூறிவருகின்றனராம்.
ராமேஸ்வரம் டார்கெட்: விஜய் தற்போது சென்னை நீலாங்கரையில் தங்கியிருந்தாலும், சென்னையில் போட்டியிடப்போவதில்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கின்றாராம். குறிப்பாக தனது பூர்வீகமான ராமேஸ்வரத்தில் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறப்படுகின்றது. இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர் ஜெயக்குமார் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கடந்த 2011ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் தனது ரசிகர் மன்றத்தின் சார்பாக கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தி, இலங்கைக்கு எதிராக மிகவும் ஆக்ரோஷமான முழக்கங்களை எழுப்பியிருந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு ஈழப்போர் நடைபெற்ற காலத்தில் தனது ரசிகர்களுடன் சென்னையில் உண்ணாவிரதப் போரட்டத்திலும் ஈடுபட்டார். இதுமட்டும் இல்லாமல் நடிகர் சங்கத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளார்.

அண்மையில் தூத்துக்குடி வெள்ளத்தின்போது கூட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நேரடியாகச் சென்று அவரே நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதனால் விஜய்க்கு ராமேஸ்வரத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் கடந்தும் நல்ல செல்வாக்கு இருப்பதால் ராமேஸ்வரத்தில் விஜய் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகின்றது.
இதுவும் லிஸ்ட்ல இருக்கு: அதேநேரத்தில், விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திர சேகர் வளர்ந்த ஊரான கோவையும் விஜய்யின் மனக்கணக்கில் இருப்பதகாவும் கூறப்படுகின்றது. இதற்கு மற்றொரு காரணம் விஜய்க்கு இங்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் எனவும் கூறப்படுகின்றது. இதுமட்டும் இல்லாமல் விஜய் அல்லது தனது தந்தை வளர்ந்த கோவையிலோ தான் விஜய் களமிறங்க முடிவு செய்துள்ளாராம். இந்நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவத்தால் விஜய் நேரடியாக மக்களைச் சந்தித்துள்ளதால் கள்ளக்குறிச்சியிலும் விஜய் களமிறங்க முடிவு எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனவும் பேச்சுகள் அடிபடுகின்றது. விஜய்க்கு மிகவும் நெருக்கமான வட்டாரத்தில் இருப்பவர்கள் மதுரையில் போட்டியிட்டு வெல்வது சிறப்பான அரசியல் தொடக்கமாக இருக்கும் என பேசி வருகின்றனராம்.
மொத்தத்தில் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய் போட்டியிடுவது உறுதி என்பதால் அது எந்த தொகுதியாக இருக்கும் என ரசிகர்கள் விஜய்யின் பிறந்த நாள் கொண்ட்டாட்டங்களுக்கு மத்தியில் ரசிகர்கள் தீவிரமாக பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











