எல்லை மீறிய விவகாரம்.. மீண்டும் வெடித்த ரசிகர்கள் சண்டை.. டிரெண்டாகும் #WeStandWithVijayAnna
சென்னை: இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் கொடுத்த பேட்டிகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் மீண்டும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சண்டை வெடித்துள்ளது.
இந்த முறை இன்னமும் மோசமாக எல்லை மீறிய சண்டையாக இரு தரப்பில் இருந்து கேவலமான ஹாஷ்டேக்குகள் மற்றும் ட்வீட்களுடன் டிரெண்டாகின.
அதனைத் தொடர்ந்து, தற்போது நடிகர் விஜய் ரசிகர்கள் பாசிட்டிவிட்டியை கிரியேட் பண்ணும் விதமாக #WeStandWithVijayAnna என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

என்ன பிரச்சனை
எல்லா வீடுகளிலும் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பிரச்சனைகள் இருப்பது இயல்பு தான். ஆனால், அந்த பிரச்சனை வீதிக்கு வருவது சாதாரண வீடுகளில் சகஜம் என்றாலும், பாப்புலரான நடிகர் என்பதால், விஷயம் பூதாகரமாகி விடுவதும் இயல்பு தான். இயக்குநர் சந்திரசேகர் விஜய் பெயரில் கட்சியை ஆரம்பித்தது தான் பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர்.

அதிரடியாக மறுத்த விஜய்
நடிகர் விஜய் புதிய கட்சியை ஆரம்பிக்கிறார் என தகவல்கள் பரவிய நிலையில், அதிரடியாக அது தனது கட்சி இல்லை என்றும், தனது தந்தையின் கட்சி என்றும், அதற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் நடிகர் விஜய் அதிரடியாக அறிக்கை வெளியிட பிரச்சனை இன்னும் பிரளயமானது.

சந்திரசேகர் பேட்டி
மாஃபியா கும்பலிடம் சிக்கிக் கொண்டு மகன் விஜய் தவிக்கிறார் என்றும், தன்னால் ஹீரோவான விஜய், இப்போ தன்னையே மதிக்காமலும், தனது பேச்சை கேட்காமலும் நடக்கிறார் என்றும், ஏகப்பட்ட செய்தி நிறுவனங்களுக்கு தொடர்ந்து சந்திரசேகர் பேட்டி கொடுத்து வருவது விஜய் ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது.

ட்விட்டரில் வெடித்த சண்டை
சினிமா படங்கள் ரிலீசாகாத நிலையிலும், விஜய், அஜித் பட அப்டேட்கள் வெளியாகமல் இருப்பதாலும், தல தளபதி ரசிகர்கள் இடையே ட்விட்டரில் ஹாஷ்டேக் சண்டை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் குறித்த விஷயங்கள் வைரலாக தொடங்கிய நிலையில் மீண்டும் ட்விட்டரில் விஜய் அஜித் ரசிகர்கள் சண்டை வெடித்தது.

மோசமான ஹாஷ்டேக்
#SACexposesVijayMafia, #நன்றிகெட்டவிஜய் #நன்றிகெட்டஅஜித் என விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் மிகவும் கீழ்த்தரமான ட்விட்டர் போர் நடத்தினர். இரு பெரிய நடிகர்களையும் கிண்டல் செய்தும், கேவலப்படுத்தியும், மிகவும் எல்லை மீறிய வார்த்தைகளை பதிவிட்டும் ரொம்பவே மோசமாக இந்த சண்டை சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியது.
விஜய் அண்ணாவுக்கு துணை நிற்போம்
இந்நிலையில் தற்போது, தளபதி விஜய் ரசிகர்கள் இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பாசிட்டிவிட்டியை பரப்பும் நோக்கில், #WeStandWithVijayAnna என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். எந்த நிலை வந்தாலும், எங்கள் தளபதியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும், விஜய் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களையும் ஆதரவு குரல்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
பக்கத்து மாநிலம்
கோலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி, ஆந்திரா ரசிகர்களும் தளபதி விஜய்க்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுனா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் விஜய்க்கு ஆதரவாக இந்த விவகாரத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். விஜய்க்கு எதிராக பரப்பப்படும் நெகட்டிவிட்டியை இக்னோர் பண்ணுங்க என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
மாஸ்டருக்கு வெயிட்டிங்
தளபதி விஜய்யை சுற்றித் துரத்தும் எல்லா பிரச்சனைகளும் மாஸ்டர் படம் திரைக்கு வரும் அறிவிப்பு வெளியானாலே போய் விடும் என்றும், தீபாவளிக்கு மாஸ்டர் படத்தின் டீசர் அல்லது டிரைலரை வெளியிடவும் சந்தடி சாக்கில் விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











