GOAT Free Tickets: அமைச்சரின் வாயை அடைத்த ரசிகர்கள்! கோட் படத்தின் டிக்கெட்டை இலவசமாக வழங்கி சர்ப்ரைஸ்
கும்பகோணம்: தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் படம் நாளை அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ்., எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகளை உலகநாடுகள் முதல் உள்ளூர் வரை அர்ச்சனா கல்பாத்தி சிறப்பாகவே செய்துள்ளார். தாமாகவே முன் சென்று பல சேனல்களுக்கு பேட்டி அளித்து, படம் குறித்து பேசினார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தின் முன் பதிவு ஒரு வாரத்திற்கு முன்னர் இருந்தே தொடங்கிய நிலையில், பல இடங்களில் ரசிகர்கள் டிக்கெட்டுகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கியுள்ளனர். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் என்ற படம் நாளை அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்தப் படம் விஜய்யின் 68வது படமாகும். படத்தில் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, ஜெயராம், வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நடித்துள்ளதைப் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே டெக்னிக்கலாக உருவாக்கப்பட்ட படங்களில் தி கோட் படத்திற்குத்தான் அதிக செலவு செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு மொத்தம் ரூபாய் 400 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய்யின் சம்பளம் மட்டும் ரூபாய் 200 கோடி. மீதமுள்ள 200 கோடியில்தான் படத்தின் மற்ற செலவு. விஜய்யின் சம்பளம் மட்டும் இவரது நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மொத்த பட்ஜெட்டினை விட அதிகம் ஆகும்.

டீ - ஏஜிங்: படத்தில் விஜய் மொத்தம் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கின்றார். இதனால் விஜய்யின் ஒரு கதாபாத்திரம் டீ- ஏஜிங் செய்யப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரம் படம் முழுவதும் வருவதைப் போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல், 18வயது கதாபாத்திரமும் டீ- ஏஜிங் செய்யப்பட்டுள்ளது. ஸ்பார்க் பாடலில் டீ-ஏஜிங் செய்தது ரசிகர்களுக்கு பிடிக்காததால், மீண்டும் டீ-ஏஜிங் பணிகள் செய்யப்பட்டுள்ளது.

1100 திரையரங்குகள்: கோட் படம் தமிழ் நாடு முழுவதும் உள்ள 1,100 திரையரங்குகளிலும் சோலோவாக ரிலீஸ் ஆகவுள்ளது. இதுமட்டும் இல்லாமல் மல்டி ஃப்ளக்ஸ் திரையரங்குகளும் உள்ளன. அவைகளைக் கணக்கில் எடுத்தால் படம் திரையிடப்படும் காட்சிகளின் எண்ணிக்கை, முதல் நாளிலேயே பல ஆயிரங்களை அசால்ட்டாக தாண்டிவிடும். ஐமேக்ஸ் திரையரங்கிலும் படம் ரிலீஸ் ஆகின்றது. இது இல்லாமல், அண்டை மாநிலங்கள், ஹிந்தி வெர்ஷன் வெளிநாடுகள் என படத்தின் ரிலீஸ் தியேட்டர்களின் எண்ணிக்கை என்பது இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவிற்கு இருக்கப்போகின்றது என்பது மட்டும் தெளிவாகத்தெரிகின்றது.

அதிகாலை காட்சி: பல இடங்களில் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முடிந்துவிட்டது. இதுமட்டும் இல்லமல், பல இடங்களில் ரசிகர்கள் டிக்கெட்டிற்காக இன்னமும் அலைந்துகொண்டு உள்ளனர். படத்திற்கு அதிகாலை காட்சிகள் குறித்து இன்னும் எதுவும் முடிவு செய்யப்படாததால், அதிகாலை காட்சிகள் திரையிடுவது முடிவானால், இன்னும் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிகாலை காட்சிக்கு டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் தீவிரமாக உள்ளனர்.

இலவச டிக்கெட்: ஒருபக்கம் படத்தின் ரிலீஸை முன்னிட்டே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். பலர் டிக்கெட்டிற்காக அலைந்து கொண்டு இருக்கும்போது, தஞ்சாவூரை அடுத்துள்ள கும்பகோணம் பகுதியில் உள்ள விஜய் ரசிகர்கள் நற்பணி இயக்கத்தினர், மகளிருக்கு தி கோட் படத்தின் டிக்கெட்டினை இலவசமாக வழங்கியுள்ளனர். இது தொடர்பான செய்திகள் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏற்கனவே திமுக அமைச்சர் அன்பரசன், நடிகர்கள் ரசிகர்களுக்கு டிக்கெட்டுகளை இலவசமாக தருவார்களா எனவும், ரூபாய் 2000க்கு டிக்கெட்டினை விற்கும் இவர்களால் நாட்டை காப்பாற்ற முடியுமா கேள்வி எழுப்பியிருந்த நிலையில், விஜய் ரசிகர்களின் இந்த செயல் அமைச்சருக்கு பதில் அளிக்கும் விதமாக இருப்பதாக பலர் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications











