GOAT Box Office Day 14: தளபதினா சும்மாவா? 3வது வாரத்தில் வசூலில் பல கோடிகளை தட்டித்தூக்கும் கோட்!
சென்னை: விஜய் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தி கோட். இந்தப் படத்தில் விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடிப்பில் மிரட்டிவிட்டுள்ளார். படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியாகி இன்றுடன் 15 நாட்கள் ஆகின்றது. இந்நிலையில் படத்தின் 14 நாட்கள் வசூல் விவரம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். ஏற்கனவே 13 நாட்களில் படம் ரூபாய் 413 கோடிகள் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
படத்தின் மொத்த தயாரிப்புச் செலவு மட்டும் ரூபாய் 386 கோடி என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார். இதுமட்டும் இல்லாமல், படத்தில் நடிக்க விஜய்க்கு ரூபாய் 200 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது எனவும் அவரே ஒப்புக்கொண்டார். படம் முதல் நாளில் 126.32 கோடிகளை அள்ளியது. முதல் நான்கு நாட்களில் ரூபாய் 288 கோடிகளை வசூல் செய்தது என படக்குழு தரப்பில் இருந்தே தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் படத்தின் வசூல் குறித்து படக்குழு தரப்பில் எதுவுமே தெரிவிக்கப்படவில்லை. இதனால் பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்து வந்தனர்.

படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருடன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெய்ராம், பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பார்த்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்துக் கொண்டே இருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு.
சோலோ ரிலீஸ்: குறிப்பாக தோனி களமிறங்கும் காட்சியெல்லாம் திரையில் காட்டப்பட்டபோது ரசிகர்கள் ஆரவாரத்தால் திரையரங்கமே அதிர்ந்தது. படம் தமிழ் நாட்டில் மட்டும் சோலோவாக 1,100 திரையரங்குகளில் வெளியானது. நாளை அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி படம் தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 8 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதால், கோட் படத்தின் தியேட்டர்களின் எண்ணிக்கையும் காட்சிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.

நஷ்டம்: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால் கோட் படம், அவரது சினிமா வாழ்க்கையில் கடைசி இரண்டாவது படமாக அமைந்துள்ளது. படம் ரிலீஸ் ஆனதில் இருந்து படம் பார்த்த அவரது தீவிர ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடி வருகின்றனர். படம் தெலுங்கில் நஷ்டம் அடைந்ததாக செய்திகள் வெளியானது. கோட் படம் தெலுங்கிலும் நல்ல வசூலைக் குவிக்கும் என படக்குழு எதிர்பார்த்த நிலையில், தெலுங்கில் கிட்டத்தட்ட அட்டர் ஃபிளாப் படமாக மாறிப்போனது.

வசூல் விவரம்: இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகி நேற்றுடன் அதாவது செப்டம்பர் 18ஆம் தேதியுடன் 14 நாட்கள் ஆகின்றது. இந்த 14 நாட்களில் படத்தின் வசூல் என்பது படக்குழுவினர் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும், ஓரளவிற்கு கணிசமாக உயர்ந்து கொண்டே உள்ளது. இப்படியான நிலையில், 14 நாட்களில் படத்தின் வசூல் என்பது ரூபாய் 420 கோடிகள் வரை வசூல் ஆகியிருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் 13 நாட்களில் படம் ரூபாய் 413 கோடிகளை வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்தது. 2024ஆம் ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் படங்களில் கோட் படம்தான் அதிக வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது.



Click it and Unblock the Notifications











