Vijay: விஜய்யை நோக்கி கண்ணாடியை வீசிய ரசிகர்.. தளபதி மாஸ் பண்ணீட்டாப்ளயே!
புதுச்சேரி: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், இன்று ஏப்ரல் 4ஆம் தேதி பாண்டிச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்திற்கு அவருக்கு பாண்டிச்சேரியில் மூன்று இடங்களில் பேச அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அவர் பயணித்த பாதை முழுவதும் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் ஏகபோக வரவேற்பு அளித்தனர்.
குறிப்பாக, வழிநெடுகிலும் மலர்கள் தூவுதல், மாலைகள் அணிவித்தல், அவரை நோக்கி மாலைகள் வீசுதல், தர்பூசணி மற்றும் இளநீர் வழங்குதல், சால்வைகள் போர்த்துதல் போன்ற பல்வேறு வழிகளில் தங்களது பேரன்பை வெளிப்படுத்தினர். இந்த அளவுக்கு விஜய்க்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் விஜய் பல மாவட்டங்களுக்கு பிரச்சாரத்திற்காக பயணம் செய்திருந்தாலும், அதைவிட கூடுதலாக பாண்டிச்சேரியில் மிகவும் மகிழ்ச்சியாகவே அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இன்னும் சொல்லப்போனால், ஒரு சிறிய குழந்தையைப் போல சிரித்துக்கொண்டே மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

விஜய் வழக்கமாக ரோடு ஷோ நடத்துவதற்கு தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் அனுமதி கிடைப்பது இல்லை. குறுகலான சாலைகள், போக்குவரத்து நெரிசல், மக்கள் அதிகம் பயன்படுத்தும் நேரம் போன்ற பல காரணங்களால் அனுமதி மறுக்கப்படுகிறது. அதே சமயம் அகலமான சாலைகளில் மட்டுமே அவருக்கு ரோடு ஷோ செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால், பாண்டிச்சேரியில் அவருக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி கிடைத்ததால், ரசிகர்களும் தொண்டர்களும் வழிநெடுகிலும் திரண்டு வந்து அவரை வரவேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது பாதுகாப்புக்கு வந்த தனியார் காவலர்கள் சில இடங்களில் ரசிகர்களை மிகவும் கடுமையாக கையாண்டதை விஜய் கண்டித்தார். இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

மேலும், ரசிகர்கள் பலரும் விஜய்க்கு இளநீர், தர்பூசணி உள்ளிட்ட பல பொருட்களை வழங்கி தங்களது அன்பை வெளிப்படுத்தினர். இதில் ஒரு ரசிகர் விஜயை நோக்கி தன்னிடம் இருந்த கண்ணாடியை வீச, விஜய் அதைப் பிடித்து உடனே அணிந்து கொண்டு அந்த ரசிகரை நோக்கி சிரித்தபடி போஸ் கொடுத்தார். இதைக் எதிர்பார்க்காத அந்த ரசிகர் உடனே புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











