300 கோடி வசூலை நெருங்கிய வாரிசு... விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த சர்ப்ரைஸ்!
சென்னை: விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.
வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான வாரிசு படத்துக்கு முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓப்பனிங் கிடைத்தது.
முக்கியமாக அஜித்தின் துணிவு திரைப்படமும் அதேநாளில் வெளியான நிலையில், தற்போது வாரிசு பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்து அபிஸியல் அப்டேட் கிடைத்துள்ளது.

பொங்கல் ரேஸில் விஜய்
பீஸ்ட்டை தொடர்ந்து விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த 11ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸானது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான வாரிசு படத்தை, வம்ஷி பைடிப்பள்ளி இயக்க, தில் ராஜூ தயாரித்திருந்தார். விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் முக்கியமான பாத்திரங்களில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஃபேமிலி சென்டிமெண்ட்டில் உருவான இந்தப் படத்துக்கு முதல் வாரத்திலிருந்தே நல்ல ஓப்பனிங் கிடைத்தது. அதேநேரம் அஜித்தின் துணிவு திரைப்படமும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி வசூல்
இந்தாண்டு பொங்கல் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் வாரிசு - அஜித்தின் துணிவு படங்களுக்கு இடையே கடும் போட்டி காணப்பட்டது. இதனால் திரையரங்க உரிமையாளர்களும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர். பொங்கல் விடுமுறை வரை இரண்டு திரைப்படங்களின் வசூலும் கொஞ்சம் கூட குறையவில்லை. இந்நிலையில், வாரிசு படத்தின் வசூல் 300 கோடியை நெருங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. வாரிசு ரிலீஸாகி மொத்தம் 16 நாட்கள் ஆன நிலையில், இதுவரை ரூ.275 கோடி வசூலித்துள்ளதாம்.

இந்தியாவில் 200 கோடி
மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள வாரிசு படத்துக்கு ரசிகர்களிடம் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனிடையே இந்தியாவில் மட்டும் 193.94 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் இந்தியா தவிர்த்து வெளிநாடுகளில் மொத்தம் 10 மில்லியன் டாலர் வரை கலெக்ஷன் செய்துள்ளதாம். இதனடிப்படையில் மொத்தம் 275 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளது வாரிசு. பீஸ்ட்டுக்கு அதிகமான நெகட்டிவான விமர்சனங்கள் வந்த நிலையில், வாரிசு திரைப்படம் மூலம் விஜய் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

விரைவில் அடுத்த சர்ப்ரைஸ்
இரண்டு வாரங்களின் முடிவில் 275 கோடி வசூலை கடந்துவிட்ட வாரிசு, மூன்றாவது வாரத்தில் 300 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வாரிசு படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இப்போது 300 கோடி வசூலை கடந்துவிட்டால் வாரிசு சக்சஸ் செலிப்ரேஷன் இன்னும் தரமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே பிப்ரவரி முதல் வாரத்தில் விஜய்யின் தளபதி 67 அப்டேட் வரவிருப்பதால், இப்போது அதில் தீவிரமாகிவிட்டனர் ரசிகர்கள். அதனால் டிவிட்டரில் அடிக்கடி தளபதி 67 என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் விஜய் - லோகேஷ் கூட்டணி இணைவது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











