GOAT: தளபதி ரசிகர்களால் ஸ்தம்பித்த சென்னை.. காரை எடுக்க முடியாமல் ஆட்டோவில் சென்ற அர்ச்சனா கல்பாத்தி
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் சுமார் 400 கோடி செலவில் உருவாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்ததை விடவும் பல கதாபாத்திரங்களில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கவில்லை.
அதேநேரத்தில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிகாலை சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் படத்தினைக் காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் படம் பார்க்க அண்டை மாநிலங்களுக்குச் சென்றனர்.

படம் மாபெரும் வெற்றி அடையவேண்டும் என நேற்றில் இருந்து திரைத்துறையைச் சேர்ந்த பலரும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். படத்தில் படக்குழு அறிவித்தவர்கள் மட்டும் இல்லாமல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க பல கேமியோ கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர். இது ரசிகர்களுக்கு உண்மையிலேயே இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

இன்றைக்கு படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, அவரது சகோதரி ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோர் சென்னையில் உள்ள பிரபலமான திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து பார்த்தனர். மேலும் இவர்களுடன் படத்தில் மட்ட பாடலுக்கு நடனமாடியுள்ள நடிகை த்ரிஷாவும் படம் பார்த்தார். இவர்கள் மட்டும் இல்லாமல், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். அதேபோல் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு கமலா தியேட்டரில் கோட் படத்தினைப் பார்த்தார்.

ஸ்தம்பித்த திரையரங்கம்: படத்தின் முதல் காட்சி முடிந்ததும் திரையரங்கைவிட்டு வெளியே வந்துள்ளார்கள். ஆனால் திரையரங்கின் முன் அடுத்த காட்சியைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால், இவர்கள் எப்படி வெளுயேறுவது எனத் தெரியாமல், கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்துள்ளனர். வெளியே நின்று கொண்டு இருந்த விஜய் ரசிகர்கள், முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு வெளியேறிய ரசிகர்கள் என பெரும் கூட்டம் கூடியதால் தியேட்டரே ஸ்தம்பித்துப் போனது.

ஆட்டோ: இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் நின்று கொண்டு இருந்த அர்ச்சனா கல்பாத்தி மற்றும் அவரது சகோதரி, ' இப்போதைக்கு காரை வெளியே எடுக்க முடியாது. ரசிகர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது என முடிவெடுத்து, தியேட்டரில் இருந்து மற்றொரு வழியாக வெளியேறினர். கொஞ்ச தூரம் இவர்கள் நடக்க நடக்க இவர்களை அடையாளம் கண்டு கொண்ட மக்கள், கோட் படத்திற்காக வாழ்த்துகள் கூறினர். அதன் பின்னர் இவர்களுடன் மொத்தம் மூன்று பேர் ஆட்டோவில் ஏறிச் சென்றனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இவர்கள் படம் பார்த்த திரையரங்கம் மட்டும் இல்லாமல், சென்னை, மதுரை, கோவை, ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் கோட் படம் ரிலீஸ் செய்யப்பட்ட திரையரங்குகள் அனைத்தும் ரசிகர்களின் கூட்டத்தால் ஸ்தம்பித்துள்ளது.


Click it and Unblock the Notifications











