GOAT: ரூ. 200 கோடி சம்பளம் முதல் ரூ. 1000 கோடி வசூல் டார்கெட் வரை.. கோட் படத்தின் மொத்த ஜாதகம் இதோ
சென்னை: தளபதி விஜய் (Vijay ) நடிப்பில் உருவாகி வரும் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் தி கோட் (The GOAT). இந்தப் படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் ரிலீஸ் பணிகளிலும் புரோமோசன் பணிகளிலும் அர்ச்சனா கல்பாத்தி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். ஏற்கனவே படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகியிருந்தாலும், நேற்று அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி, படத்தின் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்த நாளை முன்னிட்டு மட்ட பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது. பாட்டு ரசிகர்களுக்குப் பிடித்துப் போனதால், பாடலைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தில் உள்ள பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
நட்சத்திரங்கள்: படத்தில் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, ஜெயராம், வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நடித்துள்ளதைப் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.

படக்குழு: ஏ.ஜி.எஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். மேலும் படத்தின் கதையை வெங்கட் பிரபு, சந்துரு, எழிலரசு குணசேகரன் ஆகியோர் எழுதியுள்ளனர். படத்தின் ஒளிப்பதிவாளராக சித்தார்த நுனி பணியாற்றியுள்ளார். வெங்கட் ராஜன் எடிட்டராக பணியாற்றியுள்ளார். திலீப் சுப்புராயன் சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளார். வாசுகி பாஸ்கர் மற்றும் பல்லவி சிங் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியுள்ளனர்.
விஜய் சம்பளம் மற்றும் பட்ஜெட்: தமிழ் சினிமா வரலாற்றிலேயே டெக்னிக்கலாக உருவாக்கப்பட்ட படங்களில் தி கோட் படத்திற்குத்தான் அதிக செலவு செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு மொத்தம் ரூபாய் 400 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய்யின் சம்பளம் மட்டும் ரூபாய் 200 கோடி. மீதமுள்ள 200 கோடியில்தான் படத்தின் மற்ற செலவு. விஜய்யின் சம்பளம் மட்டும் இவரது நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மொத்த பட்ஜெட்டினை விட அதிகம்.

டீ - ஏஜிங்: படத்தில் விஜய் மொத்தம் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கின்றார். இதனால் விஜய்யின் ஒரு கதாபாத்திரம் டீ- ஏஜிங் செய்யப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரம் படம் முழுவதும் வருவதைப் போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல், 18வயது கதாபாத்திரமும் டீ- ஏஜிங் செய்யப்பட்டுள்ளது. ஸ்பார்க் பாடலில் டீ-ஏஜிங் செய்தது ரசிகர்களுக்கு பிடிக்காததால், மீண்டும் டீ-ஏஜிங் பணிகள் செய்யப்பட்டுள்ளது.
பாடல்கள்: இதுவரை படத்தில் இருந்து நான்கு பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் மூன்று பாடல்களில் இரண்டு பாடல்கள் விஜய் பாடியுள்ளார். இந்த மூன்று பாடல்களில் இரண்டு பாடல்கள் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் நான்காவது பாடலான மட்ட பாடலை ஒட்டுமொத்த தளபதி ரசிகர்கள் பட்டாளமும் கொண்டாடி வருகின்றனர். சின்ன சின்ன கண்கள் என்ற பாடலை விஜய் பாடியுள்ளார். அதில் மறைந்த பாடகி பவதாரிணி குரல் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தாதது மட்டும் ரசிகர்களுக்கு இப்போதும் கவலையாக உள்ளது. விவேக் மற்றும் கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளனர்.

1000 திரையரங்குகள்: கோட் படம் தமிழ் நாடு முழுவதும் உள்ள ஆயிரம் திரையரங்குகளிலும் சோலோவாக ரிலீஸ் ஆகவுள்ளது. இதுமட்டும் இல்லாமல் மல்டி ஃப்ளக்ஸ் திரையரங்குகளும் உள்ளன. அவைகளைக் கணக்கில் எடுத்தால் படம் திரையிடப்படும் காட்சிகளின் எண்ணிக்கை, முதல் நாளிலேயே பல ஆயிரங்களை அசால்ட்டாக தாண்டிவிடும். ஐமேக்ஸ் திரையரங்கிலும் படம் ரிலீஸ் ஆகின்றது. படத்தின் முன் பதிவு தொடங்கி பல இடங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளது.
1000 கோடி வசூல்: படத்தின் தயாரிப்பே ரூபாய் 400 கோடி. இந்தப் படத்தின் வசூல் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படமும் செய்யாத வசூலைச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் சோலோவாக ரிலீஸ் செய்யப்படுகின்றது. மேலும் தமிழ் சினிமா வரலாற்றிலேயே ரூபாய் 1000 கோடிகளை அள்ளிய முதல் படம் என்ற சாதனையை தி கோட் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. படக்குழுவினரும் ரூபாய் 1000 கோடி வசூல் ஆகும் என நம்பிக்கையோடு உள்ளனர்.

விஜய் அரசியல்: தி கோட் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தபோதுதான், நடிகர் விஜய் தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். மேலும், சமீபத்தில்தான் கட்சியின் கொடியையும், கொடி பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார். இது மட்டும் இல்லாமல், கோட் படத்தை தவிர மற்றொரு படத்தில் நடித்துவிட்டு முழுக்க முழுக்க அரசியலில் கால்பதிக்கவுள்ளார். தனது கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் படம் வரும் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.


Click it and Unblock the Notifications