எல்லா ஏரியாவுலயும் ஐயா கில்லிடா.. ரீ ரிலீஸாகும் கில்லி.. எப்போது தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படமான கில்லி ரீ ரிலீஸ் ஆவது குறித்து தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய்யின் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் பிடித்த படமாகும். நடிகர் விஜய் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து இருந்தாலும், விஜய் நடித்த கில்லி படத்தை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அந்த படத்தில் காமெடி, சென்டிமெண்ட், காதல், சண்டை என அனைத்திலும் மிரட்டி இருப்பார்.

கில்லி ரீ ரிலீஸ்: தரணியின் இயக்கத்தில் வித்யாசாகரின் இசையில் த்ரிஷா, பிரகாஷ் ராஜ் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படத்தை இப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் ரசித்து பார்க்க ஒரு கூட்டம் இருக்கிறது. இந்நிலையில், கில்லி திரைப்படம் ரீ ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அந்த வகையில், இப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டிஜிட்டல் முறையில் உலகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. இத்திரைப்படம், 2004ம் ஆண்டு ஏப்ரல் 14ந் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கில்லி படத்தை அதே தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ரசிகர்கள் வேதனை: விஜய் அரசியலுக்கு வருவார் என்று கடந்த சில ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சிப் பெயரை அறிவித்தார். மேலும், திரைப்படம் சார்ந்த கடமைகளை முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்காக அரசியலில் ஈடுபடவுள்ளேன். அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றிக் கடனாக கருதுகிறேன் என்று கூறி இருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.
விறுவிறுப்பான படப்பிடிப்பு: அரசியல் என்ட்ரியால் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய்யின் கடைசி இரண்டு படங்களில் கோட் திரைப்படமும் ஒன்று என்பதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், பிரேம்ஜி, நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











