அப்பா பெயரை காப்பாற்றவில்லையா?.. மனோஜ் பாரதிராஜாவுக்கு மன அழுத்தமா?.. தம்பி ராமையா கொடுத்த ஷாக்
சென்னை: பாரதிராஜாவின் மகனான மனோஜ் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 48 வயதே ஆன அவரது உயிரிழப்பு பாரதிராஜாவை நிலைகுலைய செய்திருக்கிறது. மனோஜுக்கு அஞ்சலி செலுத்த வரும் அனைவருமே இயக்குநர் இமயத்தையும் கண்டு கவலை கொள்கின்றனர். இந்தச் சூழலில் இயக்குநரும், நடிகருமான தம்பி ராமையா மனோஜுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் ஒரே மகன் மனோஜ். அவர் தாஜ் மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானர். பாரதிராஜா இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என பெரும் எதிர்பார்ப்போடு படம் வெளியானது. ஆனால் மனோஜும், பாரதிராஜாவும் எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடவில்லை. அதேசமயம் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தன. இதன் காரணமாக அந்தப் படத்துக்கு ஓரளவுக்கு அடையாளம் கிடைத்தது.
எவ்வளவு முயன்றும் முடியவில்லை: தாஜ் மஹால் ஓடாததை தொடர்ந்து வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் ஹீரோவாக நடித்தார். ரவிஷங்கர் இயக்கியிருந்த அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. படிக்காத, கிராமத்து இளைஞராக மனோஜ் தனது சிறந்த நடிப்பை அந்தப் படத்தில் கொடுத்திருந்தார். பாடல்களும் சூப்பர் ஹிட்டடித்தன. ஒருவேளை தாஜ் மஹால் படத்துக்கு பதிலாக வருஷமெல்லாம் வசந்தம் அவரது முதல் படமாக வந்திருந்தால் கொஞ்சம் வெற்றியை அவர் ருசித்திருப்பார் என்றே பலரும் கருதுகிறார்கள்.

தந்தை வழியில் மகன்: வருஷமெல்லாம் வசந்தம் படத்துக்கு பிறகு அவர் நடித்த பல படங்கள் நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக வந்தாலும் பெரிதாக எடுபடவில்லை. இதன் காரணமாக இயக்கத்தில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார் அவர். அப்படி அவர் மார்கழி திங்கள் என்கிற படத்தை இயக்கினார். அதில் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. இதற்கிடையே குணசித்திர வேடங்களிலும் அவர் தலை காண்பிக்க ஆரம்பித்தார். தனக்கு கொடுக்கப்பட்டிருந்த ரோல்களை சரியாக செய்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் அவர்.
இதய அறுவை சிகிச்சை: தன்னுடன் சாதுர்யன் படத்தில் நடித்தபோது தனக்கு ஜோடியாக நடித்த நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு மனோஜுக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனையடுத்து வீட்டில் ஓய்வில் இருந்த அவருக்கு நேற்று மாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 48 என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலங்கள் அஞ்சலி: மனோஜின் உடல் அவரது நீலாங்கரை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. விஜய், சூர்யா, மணிரத்னம்,ம் கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, பாக்யராஜ், பி.வாசு, கார்த்திக் சுப்புராஜ், பாண்டியராஜன், விஜயகுமார், அருண் விஜய், சஞ்சீவ், பூர்ணிமா பாக்யராஜ்,சரவணன், பேரரசு என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பாரதிராஜாவுக்கும் அவர்கள் தங்களது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்கள். இந்நிலையில் அஞ்சலி செலுத்திவிட்டு தம்பி ராமையா செய்தியாளர்களை சந்தித்தார்.
எமோஷனலான தம்பி ராமையா: அப்போது பேசிய அவர், "பெரிய மனிதர்களுக்கு பிள்ளையாக பிறப்பது ரொம்பவே கஷ்டமான ஒன்று. அப்பா பெயரை காப்பாற்றவில்லையா?.. அடுத்து என்ன செய்யப்போறீங்க என்று ஏராளமானோர் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அப்படித்தான் மனோஜுக்கும் இந்த மன அழுத்தம் வந்திருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. பெரிய மனிதர்களுக்கு பிள்ளையாக பிறந்து தந்தையின் பெயரை, மனதை காப்பாற்ற முடியவில்லை என்றால் அவர்களால் சராசரியாக அனைவரிடமும் பேசிவிட முடியாது. வீட்டில் கதவை சாத்திக்கொண்டு இருப்பார்கள். அதுதான் அவருக்கு வந்த ஸ்ட்ரெஸ்ஸும் 48 வயதில் இந்த மரணமும் என்று நினைக்கிறேன். பாரதிராஜா எல்லோருக்குமான பிதாமகன். அவரை இப்படியெல்லாம் எங்களால் காணவே முடியவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











