விஜய்தான் அடுத்த எம்ஜிஆர்.. குழந்தைகள் பாவம் ஆளுநரே.. தம்பி ராமைய்யா ஓபன்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் விஜய்; பெரும்பான்மையை இன்னமும் நிரூபிக்க முடியாததால் ஆட்சியமைக்க முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறார். திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி காங்கிரஸ் ஆதரவளித்தாலும் விசிக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு கொடுக்க தயங்கி நிற்கின்றன. இந்நிலையில் பிரபல இயக்குநரும், நடிகருமான தம்பி ராமைய்யா வீடியோ வெளியிட்டு இதுகுறித்து ஓபனாக பேசியிருக்கிறார்.
2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முழுக்க முழுக்க பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியைத்தான் கொடுத்திருக்கிறது. காரணம் விஜய். பத்து சீட்டுக்களைகூட தாண்டாது என்று கருதப்பட்ட தவெகவோ மொத்தம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று; திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளியிருக்கிறது. இது அனைவருக்குமே ஆச்சரியம் கலந்த அதிசயம்தான். அதிலும், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினேகூட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியடைந்தது பெரிய அதிர்ச்சிதான்.

பெரும்பான்மை இல்லை: மொத்தம் 108 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றியிருந்தாலும் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்கள் இல்லை. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டது தவெக. காங்கிரஸும் பத்து வருடங்கள் இருந்த திமுகவுடனான உறவை முறித்துக்கொண்டு தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது. இதன் காரணமாக 108ஆக இருந்த ஆதரவு எண்ணிக்கை; 113ஆக உயர்ந்திருக்கிறது. ஆனால் விசிக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் ஆதரவு கொடுக்க தயங்கிவருகிறார்கள்.
ஆளுநர் அழைக்க வேண்டும்: எம்.எல்.ஏக்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டாலும்; விஜய்தான் முதலமைச்சராக வேண்டுமென்று முடிவு செய்து மக்கள் வாக்களித்துவிட்டார்கள். அவரை ஆட்சியமைக்க பொறுப்பு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்திருக்கின்றன. ஆனால் எம்.எல்.ஏக்கள் பெரும்பான்மையை நிரூபிக்காமல் பதவி பிரமாணம் செய்து வைப்பதில் இழுத்தடித்துவருகிறது ஆளுநர் மாளிகை. இந்நிலையில் பிரபல இயக்குநரும், நடிகருமான தம்பி ராமைய்யா வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
தம்பி ராமைய்யா வீடியோ: அந்த வீடியோவில் அவர், "நான் தம்பி ராமைய்யா பேசுகிறேன். கேரள ஆளுநர் மற்றும் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநரின் பாதம் தொட்டு வணங்குகிறேன். நீங்கள் மிகப்பெரிய அறிவாற்றல் கொண்டவர். நான் எந்தக் கட்சியும் சேராதவன். எம்ஜிஆர் மீது மட்டும் பக்தி கொண்டவன். இப்போது நடந்து முடிந்த தேர்தலில் 40 விழுக்காடு வாக்குகளை பெற்றிருக்கிறார். 2 கோடி பேர் வாக்களித்திருக்கிறார்கள். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக நடக்கும் விஷயங்கள் குழந்தைகளையும், என்னை போன்றவர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது.
இனம் புரியாத தொல்லை: அவர்கள் இனம் புரியாத தொல்லை வந்துவிட்டது. 113ஐ காண்பித்துவிட்டார். ஐந்தை தூக்கி போடுங்கள். 108 இருக்கிறதே. தம்பி விஜய்யை அழையுங்கள் ஐயா. அவர் கேட்டிருக்கும் இரண்டு வார அவகாசத்தை கொடுங்கள். அவர் நிரூபித்தால் ஆட்சி தொடரட்டும். இல்லையென்றால் மறு தேர்தல் வரட்டும். விஜய் அடுத்த எம்ஜிஆர். அதிமுகவில் இருப்பவர்களும் இதை புரிந்துகொள்ள வேண்டும். அவருக்கு ஆதரவு கொடுங்கள்" என்றிருக்கிறார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
