Devar Magan: தேவர்மகன் படத்தில் என்ன பிரச்சனை?.. மாரி செல்வராஜ் சொன்னது சரியா? தீயாக பரவும் பதிவு!
சென்னை: மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் தேவர்மகன் பற்றி பேசியது சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.
ட்விட்டர், பேஸ்புக் என பலரும் மாரி செல்வராஜின் கருத்துக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர். சிலர் ஆதரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தாமிரா ஆதி என்பவர் பேஸ்புக்கில் தேவர்மகன் படத்தில் உள்ள நிறை குறைகளையும், மாரி செல்வராஜ் ஏன் பாதிக்கப்பட்டார், அவர் செய்த தவறு என்ன என்பது குறித்து விளக்கியுள்ள பதிவு தீயாக பரவி வருகிறது. அந்த பதிவு அப்படியே உங்களுக்காக..

தேவர்மகன் படம் பற்றி: "தேவர்மகன் இந்தப்படத்தை மூன்று விதமாக அணுகலாம்.
முதலில் காட்சியனுபவம். அதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு மேக்கிங். இயக்கம், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், ஆர்ட், ஸ்டண்ட், அற்புதமான நடிகர் தேர்வு என அத்தனை அம்சங்களும் ஒத்திசைந்து ஒரு புதிய காட்சியனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கி திகைப்படையச் செய்தது தேவர் மகன். இது போல அத்தனை விசயங்களும் ஒத்திசைந்து கிடைக்கும் காட்சியனுபவம் கொண்ட படங்கள் மிக அரிதானவை. தேவர்மகன் தந்த அனுபவத்தை அதே ஸ்கிரிப்டின் ரீமேக்கில் கூட தெலுங்கிலோ, இந்தியிலோ தரமுடியவில்லை என்பதே இந்த படத்தை தமிழில் உருவாக்கிய குழுவின் சிறப்பு. கமல்ஹாசனின் அப்படியான பிற படங்களைக்கூட ஒருகை விரல்களுக்குள் அடக்கிவிடலாம்.
இரண்டாவது திரைக்கதை: மேதமை கொண்ட ரசிகன் மற்றும் சாமானிய ரசிகன் இருவரையும் ஒரே சமயத்தில் கவனச் சிதறல் ஏற்படாது திரைக்குள் இழுத்து வரும் திரைக்கதை மேஜிக் இந்தப்படத்தில் நிகழ்ந்துவிட்டது. சிறந்த திரைக்கதைக்கான இலக்கணங்களாக உலகளாவிய அளவில் நம்பப்படும் பல கூறுகளை, அம்சங்களை தேவர் மகன் கொண்டிருந்தது. அதனால்தான் 30 ஆண்டுகளைக் கடந்தும் சினிமாவை, திரைக்கதையை கற்க எண்ணும் இயக்குநர்களுக்கு, பல படங்களை இயக்கிய இயக்குநர்களுக்கும் கூட அது பாடமாக அமைந்துவிட்டது. அதுவே தேவர்மகனின் திரைக்கதைக்கு செவ்வியல் இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.

மூன்றாவது உள்ளடக்கம்: இதுதான் மாரி செல்வராஜால் இன்று பேசுபொருளாகியிருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை திரைக்கதைக்காக தேவர்மகன் புகழப்படும் போதெல்லாம், மறக்காமல் கன்டென்டுக்காக இகழப்பட்டுவருகிறது. கமல்ஹாசன் சிறுமைப் படுத்தப்பட்டும் வருகிறார்.
தேவர்மகன் உண்மையில் உள்ளடக்கத்தில் மோசமானதுதானா?
முதலில் படம் சாதி வேறுபாட்டை ஆதரித்ததா? படம் பார்த்த எவருக்கும் எளிமையாக தெரியவரும் பதில் இல்லை என்பதே! தேவர் சாதி மக்களுக்குள் இன்றளவும் நிலவும் சாதித்திமிர், கல்வி/வேலை போன்ற திட்டமிடலின்மை, வன்முறைக் குணம் போன்றவற்றை சுட்டிக்காட்டும் ஒரு கதையை உருவாக்க கமல் எண்ணுகிறார்.
கமல் சொல்ல வந்தது: வன்முறையால் விளைவது இரண்டுபக்கமுமே இழப்புதான் என்பதையும், அந்த வன்முறையிலிருந்து விடுபட்டு நல்வழி காண, படிப்பு, வேலை, பொருளாதார ஏற்றம் என்பதே கைகொடுக்கும் என்பதையும் தன் கதை மூலமாக முன்வைக்கிறார். அதற்காக இரண்டு சாதிகளை மோத விட்டுவிடமுடியாது. அன்றும், அதற்கு முன்பும், இன்றளவும் கூட நம் சினிமாக்களில் அதைச் செய்ய முடியாத நிலைதான் நிலவுகிறது. ஒரு சாதி மோதல் படத்தை எடுத்து வைத்துக்கொண்டு 'பார், யார் மீது குற்றமிருக்கிறது' என்று காட்டவோ, கேட்கவோ கமல்ஹாசனுக்கு மட்டுமல்ல, வேறெந்த இயக்குநர்களுக்கும் தைரியமிருந்ததில்லை. மேலும் அது சமூகத்தில் குழப்பத்தையும், விரும்பத் தகாத நிகழ்வுகளையும்தான் ஏற்படுத்தும். சொல்லப்போனால் இன்றைய தலித்திய இயக்குநர்கள்தான் அதை சினிமாக்களில் துணிந்து பதிவு செய்கின்றனர்.

இசக்கி என்ன சாதி: யாரோ ஒரு தனி நபரை காரணமாகச் செய்தோ, அல்லது அரசியல்வாதிகள் போன்ற லாபநோக்குள்ள மூன்றாம் நபரை காரணியாக்கியோ சாதி துவேஷத்தைப் பதிவு செய்து, நியாயமாக கேட்கவேண்டிய விசயங்களை மறைபொருளாகவும், சிற்சில இடங்களில் கூர் வசனங்களாகவும் பொதிந்து வைக்கின்றனர். இது வரவேற்கப்பட வேண்டிய விசயமே! ஆனால், இது இன்றைய சினிமா மொழி! இது கமல்ஹாசனுக்கோ, அவர் போன்றோருக்கோ வசப்பட வேண்டுமென்ற அவசியமுமில்லை. (ஆனால், கமலின் அந்த வகைமையிலான முயற்சிதான் விருமாண்டி.) அதனால்தான், தேவர் மகன் படத்தில், ஒரு வக்கீல் பாத்திரத்தைத் தவிர மாற்று சாதியிலிருந்து ஒரு பாத்திரத்தைக்கூட நம்மால் காண இயலாது. இசக்கி எனும் கதாபாத்திரத்தை தலித் என்று எப்படி மாரி செல்வராஜ் எடுத்துக்கொண்டார் என்பதே முதல் ஆச்சரியம். (ஒருவேளை அப்படியே வைத்துக்கொண்டாலும் கூட சாதியைக் காரணம் காட்டி அந்தப் பாத்திரத்துக்கு எந்த இழுக்கும் படத்தில் வைக்கப்படவில்லை)
இதுதான் கதை: தேவர் மகனின் திரைக்கதையைப் பொருத்தவரை பெரிய தேவர் மற்றும் சின்ன தேவர் என்பன பகைமை கொண்ட இருவேறு பட்ட நிறுவனங்கள். இரண்டு பக்கமும் அவரவருக்கு ஆதரவளிக்கும் கூட்டத்தினர் இருக்கின்றனர். இன்றைய முத்தையாப் படங்களில் வரும் ஹீரோ போலவோ, அல்லது அந்தப்படத்தின் மாயன் போலவோ ஏன் சக்திவேல் இல்லை? உயர்படிப்பு, காதல், சொந்தத்தொழில், பொருளாதார ஏற்றத்தை நோக்கமாகக் கொண்ட இளைஞன் சக்தி. அவனுக்கு அந்தக் கிராமத்தின் மீது எந்த அக்கறையும் இல்லை. ஆனால், மரியாதைக்காகவும், அன்புக்காகவும் தந்தையைக் காணவரும் சக்தி எதிர்பாராத விதமாக, அவராலும், நிகழும் நிகழ்வுகளாலும் அந்தச்சுழலில் சிக்கிக்கொள்கிறான்.

சிவாஜியின் ரோல்: தந்தையின் விருப்பமான மக்களை நல்வழிப்படுத்தும் காரியத்தை நாம் தொடருவோம் என்று முயன்று பார்க்க நினைக்கிறான். மாயனை வெல்வதல்ல பெரியதேவரின் நோக்கம், இந்த மாயன் எனும் சொந்த விரோதியையும் வைத்துக்கொண்டு, மாறிமாறி இரு தரப்புக்கும் இடையே கைகலப்புதான் நடந்துகொண்டிருக்கிறதே தவிர மக்கள் விவசாயம் பார்த்து உருப்புடுற வழியைக் நம்மால் ஏற்படுத்தித் தரமுடியவில்லையே என்பதே அந்தப்பெரியவரின் மனத்தாங்கல்! மற்றபடி அந்தப் பாத்திரத்தின் குணவார்ப்பின் படியான சொந்தப் பிரச்சினைகள் தனி. அவருக்கோ, சக்திக்கோ சொந்த சாதி மக்களைத்தான் முன்னேற்றும் எண்ணமே தவிர எந்தத் தாழ்த்தப்பட்ட மக்களையும் சரிசமமாக நடத்துவதோ, முன்னேற்றுவதோ நோக்கமல்ல. ஒரு தலித்தை சந்திக்க நேர்ந்தால் அந்தப்படத்தில் படித்த சக்தியைத் தவிர வேறு ஒருவரும் ஏன் எடுபிடி வேலை பார்க்கும் இசக்கியோ கூட சமமாக நடத்தியிருக்க மாட்டான். அது அப்பேர்ப்பட்ட காலம் மற்றும் கிராமத்துச் சூழல்! அதில் வியக்க ஒன்றுமில்லை.
பஞ்சவர்ணமே தலித்தா?: இதில் இன்னொரு கூத்து என்னவென்றால், இசக்கி மட்டுமல்ல, பஞ்சவர்ணமே தலித்துதான் என்றும் ஒரு பக்கம் உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். அடப்பாவிகளா, ஒரு தலித்தை மணந்து கொள்ளுமளவுக்கு சக்தி முற்போக்குவாதியுமல்ல, அந்தப்படத்தில் அதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. படத்தைப் பொருத்தவரை பஞ்சவர்ணம், இசக்கி போன்றோருக்கும் சக்திக்கும் இடையே உள்ள வேறுபாடு பொருளாதாரம் மட்டுமே! இன்றைக்கும், குடிசைக்கு ஒப்பான வீட்டில் வாழும், பன்றி மேய்த்து பிழைப்பு நடத்தும் நடுச்சாதி மக்களை பார்க்க முடியும்.
அதனால்தான், மாரி மேடையில் பேசுகையில் அமைதியாக எந்த முகபாவத்தையும் வெளிப்படுத்தாமல் கமல் அமைதியாக அமர்ந்திருந்தார். அவரது உளப்போக்கு இப்படித்தான் இருந்திருக்கும்- 'நல்லாதானே பேசிகிட்டு இருந்தான், பைத்தியமா இவன்? முப்பது வருசமா மாசத்துக்கு ஒருத்தன்கிட்ட இப்படி சிக்கிக்கிறேனே!'

தேவர் மகனில் பிரச்சினையே இல்லையா?: மூன்று பிரச்சினைகள் பிரதானமாக இருக்கின்றன. தேவர் மகன் எனும் தலைப்பே முதல் பிரச்சினைதான். அன்றைக்குப் பொதுவாக படங்களில் காரக்டர்களை சாதிப்பெயரில் அழைப்பதும், படத்தலைப்புகளில் சாதியை பயன்படுத்துவதும் சாதாரணமாகப் பார்க்கப்பட்டது. சமூகத்திலும் கூட அந்த வழக்கமிருந்தது. (என்ன பிள்ளைவாள்? யாவாரம் எப்படி?- 1990. / என்ன கதிரேசா? யாவாரம் எப்படி?- 2020) அதனால், இளையராஜா அப்படி ஒரு தலைப்பை சிபாரிசு செய்கையில் கமலுக்கு அது விகல்பமாக தோன்றியிருக்க வாய்ப்பில்லை. ஒரு வியாபாரியாக மகிழ்ந்திருப்பார். நல்ல சேல் ஆகக்கூடிய தலைப்பு, மார்க்கெட்டிங் செலவு கம்மிதான் எனும் மகிழ்ச்சி. எப்போதுமே ஒரு கலைஞனாக கமல் ஒரு படி ஏறினால் அவன் தோளைப்பற்றிக்கொண்டே யாவாரி கமலும் பயணிப்பதைப் பார்க்கலாம். இல்லையென்றால், கமல் இருந்த இடத்தில் இந்நேரம் புல் முளைத்துப் போயிருக்கும்!
இரண்டாவது பிரச்சினை: போற்றிப்பாடடி பாடல். இது நிச்சயமாக ஒரு துன்பியல் நிகழ்வுதான். ஏதோ கேரக்டரைசேஷன், சிவாஜி எனும் மயக்கத்தில் பண்ணிவிட்டதாகவும், இந்தக்குற்றத்துக்கு நான், இளையராஜா, வாலி மூவருமே பொறுப்பாளி என்றும், மூவர் சார்பாகவும் நானே மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் கமல் எங்கேயோ பதிந்ததாக நினைவு.
மூன்றாவது பிரச்சனை: மூன்றாவதும், முக்கியமானதும் ஆன பிரச்சினை சாதிப்பெருமிதம்! அது கதை மற்றும் காரெக்டரைசேஷனால் விளைவது. வன்முறை கூட ஹீரோயிசமாகப் பார்க்கப்படும் துரதிருஷ்ட சூழலில் வாழ்கிறோம். இன்றைய ஹீரோக்கள் சண்டைக்காட்சிகளில் ஃபைட்டர்களை பறக்கவிடுவது எதற்காக? அதற்காகத்தான்! மீசை, அரிவாள், மரியாதை, வசனம் என படத்தில் வரும் எல்லாக் காட்சிகளையுமே தேவர் சாதி மக்கள் பெருமிதமாக எடுத்துக்கொள்ள எல்லா வாய்ப்புகளும் உண்டு.
அப்படியே எடுத்துக்கொண்டனர். ஏன், மாயன் கதாபாத்திரத்தைக்கூட 'என்னா கெத்துல!' என்றபடி யாராவது பெருமிதமாக எடுத்துக்கொண்டிருக்கக்கூடும்! அதனால்தான் அந்தப்பாடலை அந்த சாதி மக்கள் திருமணத்திலும், இறப்பு வீட்டிலும் இன்றுவரை ஒலிக்கவிட்டுப் பயன்படுத்தி வருகின்றனர். அதையொட்டிய கலவரங்களும் கூட நிகழ்ந்ததாகப் பதிவுகள் உள்ளன.
இதைத் தவிர்த்திருக்க வேண்டுமென்றால் மொத்தத் திரைக்கதை பவுண்டையும் தூக்கி, தலையைச் சுற்றிக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் வீசியிருக்க வேண்டும்! அதனால், தமிழ்த் திரையுலகிற்கு எந்தப் பெரிய இழப்பும் ஏற்பட்டிருக்காது. கமலின் வெற்றிப்படங்களில் ஒன்று குறைந்திருக்கும். அவ்வளவுதான்!
ஒரு கலைஞன் தன் வாழ்நாளில் சில படைப்புகளை உருவாக்குகிறான். அவற்றில் சில ஆக்கத்திலும், உள்ளடக்கத்திலும் நன்றாக வந்துவிடுவதுண்டு. ஏதாவது ஒன்றிலோ, இரண்டிலுமோ மோசமான படைப்புகளும் வந்துவிடுவதுமுண்டு. பேஸ்புக்கில் இம்புட்டுக்காண்டு பதிவு போடும் நாமே இந்தக் கருமத்தை நாமா எழுதினோம் என்று எப்போதாவது எண்ணுவதுண்டு. இதெல்லாம் இயல்புதான்! தாண்டிச்செல்வோம்!
ஆனால், வம்படியாக குறியீடு தேடுவோர் போல, படத்தில் இல்லாத கதையெல்லாம் மாரிசெல்வராஜின் கண்களுக்குத் தெரிகிறதென்றால், தவறு கமல்ஹாசன் மீதல்ல, மாரிதான் தம் கண்ணாடியை மாற்றிக்கொள்ள வேண்டும். பரியேறும் பெருமாள் ஒரு தனித்துவமான படைப்பு. மாரியின் திரைமொழி சிறப்பான ஒன்று. ஆனால், அவரது அரசியல்புரிதல் இந்த லட்சணத்தில் இருக்குமென்றால் எதிர்காலப் படைப்புகள் விரைவில் பல்லிளித்துப்போகும் ஆபத்திருக்கிறது.
மாரி செல்வராஜ் மாற வேண்டும்: முத்தையா, விக்ரம் சுகுமாறன், மோகன்ஜி போன்ற பைத்தியங்கள் எதிரணி மக்களை/ இளைஞர்களை சாதிப் பெருமிதத்தில் தள்ளும், கொம்பு சீவும் வேலையை தெரிந்தோ, தெரியாமலோ பார்க்கிறார்கள் என்றால் நாமும் அதே போல நம் பக்கத்து மக்களை கொம்பு சீவும் வேலையைப் பார்க்கக்கூடாது. அது அறிவார்ந்ததுமல்ல, அறம் கொண்டோர் செய்வதுமல்ல! பா.ரஞ்சித், மாரி போன்றோர் அதைச் செய்திடக்கூடாது. அறிவையும், மனதையும் விசாலமாக்கிட வேண்டும்.
அதிமுககாரன் என்ன வேணா பண்ணலாம். திமுககாரன் அப்படி பண்ணிவிட முடியாது.
'நாம மேல வந்ததும், அவன் நமக்குச் செஞ்சதை, நாளை நாம யாருக்கும் செய்யக்கூடாது!' -இதுதான் அறிவார்ந்த சமூகம் கைக்கொள்ள வேண்டிய வரிகள்.


Click it and Unblock the Notifications











