ரஞ்சித் மீது நம்பிக்கை வைத்திருந்தேன்.. ஸ்க்ரிப்ட்டைக்கூட படிக்கவில்லை.. தங்கலான் நடிகர் டேனியல் ஓபன் டாக்
சென்னை: நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் இந்தப் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் படத்தில் நடித்திருக்கும் டேனியல் கால்டாகிரோன் இரஞ்சித் குறித்து பேசியிருக்கிறார்.
பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். அவர் இயக்கியதிலேயே மோசமான விமர்சனத்தை சந்தித்த படமாக அது அமைந்தது. மெட்ராஸ், அட்டகத்தி போன்ற அருமையான கதைகளை எழுதிய இரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது மாதிரி ஒரு கதையை எழுதியிருக்கவே கூடாது. முகநூலில் நடக்கும் உரையாடல் போல் படம் நெடுக வாடை அடித்ததாக ஓபனாக பேசினர் ரசிகர்கள்.

தங்கலான்: இப்படிப்பட்ட சூழலில் அவர் தனது அடுத்த படமாக விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார். எப்போதும் வித்தியாசமாக கதை தேர்வை செய்யும் விக்ரம் பா.இரஞ்சித்துடன் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் படம் நிச்சயம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.
டேனியல் பேட்டி: தங்கலான் படத்தில் முக்கியமான வேடத்தில் ஆங்கில நடிகர் டேனியல் கால்டாகிரோன் நடித்திருக்கிறார். அவர் இரஞ்சித் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இயக்குநர் பா.இரஞ்சித்துடன் நீண்ட சந்திப்பு நடைபெற்றது. ஸ்க்ரிப்ட்டைக்கூட படிக்காமல் கதாபாத்திரத்தை நான் ஏற்றுக்கொண்டேன். பிரச்னை என்னவென்றால் அசல் கதை தமிழில் இருந்தது. அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து படித்தால் கதையின் சுவாரஸ்யத்தை நான் இழக்க நேரிடலாம்.
நம்பிக்கை: எனவே இரஞ்சித் மீது நம்பிக்கை வைத்தேன். முதன்முறையாக ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் நடிக்க ஒத்துக்கொண்டேன் என்றால் அது தங்கலான் படம்தான். பா.இரஞ்சித் கொடுத்த அவுட் லைன்களின் அடிப்படையில் எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மேம்படுத்திவிடலாம் என்று நான் முடிவு செய்தேன். அவர் தொலைநோக்கு பார்வையுடன் இருக்கிறார்.
பழமையான மொழி: ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு கதையை மாற்றும்போது பெரும்பாலும் மொழிபெயர்ப்பில் பிரச்னை வரலாம். உலகின் பழமையான மற்றும் மிக அழகான மொழிகளில் ஒன்றான தமிழின் செழுமைக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு நியாயம் செய்யாது என்பதை உணர்ந்தேன். எனவே ரஞ்சித் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் அவர் நிறைவேற்றுவார் என்று நம்பிக்கை வைத்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











