தங்கலான்: மருதநாயகம் கமலாக மாறிய சியான் விக்ரம்.. மாளவிகா மோகனன் ஹீரோயின்..பா. ரஞ்சித்தின் சம்பவம்!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் சியான் 61 படத்திற்கு 'தங்கலான்' என்கிற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கேஜிஎஃப் கதையின் உண்மையான வரலாற்றை மையமாக வைத்து 3டியில் இந்த படம் உருவாகி வருகிறது.
மருதநாயகம் படத்தில் கமல்ஹாசன் வருவது போல சியான் விக்ரம் இருக்கிறார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஆதித்த கரிகாலனின் தீபாவளி பரிசு
இந்த ஆண்டு சியான் விக்ரம் ரசிகர்களுக்கு செம சந்தோஷமான ஆண்டாகவே மாறி உள்ளது. மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் என தொடர்ந்து சியான் விக்ரமின் திறமையான நடிப்பை கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு அடுத்த படத்தின் அட்டகாசமான அப்டேட்டும் வெளியாகி உள்ளது.

தங்கலான்
கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தின் உண்மை வரலாற்றை படமாக இயக்கப் போகிறேன் என இயக்குநர் பா. ரஞ்சித் சொன்னதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில், சியான் விக்ரமை வைத்து இப்படியொரு டைட்டிலில் தரமான சம்பவத்தை பா. ரஞ்சித் பண்ணுவார் என ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத நிலையில், தங்கலான் அறிமுக டீசரே வெளியாகி உள்ளது.

மாளவிகா மோகனன் ஜோடி
பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகை மாளவிகா மோகனன் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். அடுத்து எந்த தமிழ் ஹீரோவுடன் அவர் நடிக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், சியான் விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் அவர் நடித்து வருகிறார் என்கிற அறிவிப்பும் டீசரில் அவரது தோற்றமும் வெளியாகி உள்ளது.

பார்வதியும் இருக்காரு
பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் இந்த படத்தில் மலையாள நடிகை பார்வதியும் நடித்துள்ளார். அவரது மிரட்டலான காட்சிகளும் டைட்டில் டீசரில் வெளியாகி உள்ளது. சுதந்திர போராட்டக் காலக்கட்டத்தில் கோலாரில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாமம் போட்ட பசுபதி
பா. ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்து அசத்திய பசுபதி சியான் விக்ரமின் தங்கலான் படத்தில் நாமம் போட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எப்படியும் அவர் வில்லனாகத்தான் இருப்பார் என்றும் சர்ச்சைகளுக்கும் இந்த படம் வழிவகுக்கும் என்றும் கருத்துக்கள் இப்போதே பரவ ஆரம்பித்து விட்டன.

மருதநாயகம்
மேலாடை அணியாமல் வேட்டியை வெறும் கோவணம் போல ஏத்தி கட்டிக் கொண்டு கையில் ஆயுதத்தை ஏந்தி சியான் விக்ரம் டீசரில் இடம்பெற்றதை பார்த்த ரசிகர்கள் அப்படியே மருதநாயகம் கமல் மாதிரி இருக்காரு என கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

அப்போகலிப்டோ இன்ஸ்பிரேஷனா
ஹாலிவுட் படமான அப்போகலிப்டோ போல இந்த படம் வெளியானால் சியான் விக்ரமுக்கு தேசிய விருது கன்ஃபார்ம் என்றும், பார்க்க கொஞ்சம் பாலாவின் பரதேசி படத்தின் சாயலும் இருப்பதாக கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. தங்கலான் படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ள நிலையில், அதன் படப்பிடிப்பு ஆரம்பம் என்கிற அறிவிப்பையே இத்தனை பிரம்மாண்டமாக வெளியிட்டுள்ளார் பா. ரஞ்சித்.


Click it and Unblock the Notifications











