HBD Yuvan Shankar: இளையராஜா அமைத்த மிகச்சிறந்த ட்யூன்.. தாயுமான(யு)வன் - தங்கலான் இணை இயக்குநர்
சென்னை: தமிழ் திரைப்படத் துறையில் உள்ள முன்னணி நட்சத்திரங்களில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா (HBD Yuvan Shankar Raja) மிகவுமே முக்கியமான இடத்தைப் பெறுகின்றார். குறிப்பாக, இசைஞானி இளையராஜாவின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த யுவன் சங்கர் ராஜா, அதன் பின்னர் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே கொண்டாடும் இசை அமைப்பாளராக மாறினார். இன்று அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி தனது 45வது பிறந்த நாளைக் கொண்டாடும் யுவன் சங்கர் ராஜாவிற்கு பலரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
குறிப்பாக முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கி, அவருடன் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர்கள், நடிகைகள் மற்றும் அவருடைய ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். இந்நிலையில் தங்கலான் படத்தின் இணை இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் எழுத்தாளருமான, தமிழ் பிரபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுவன் சங்கர் ராஜாவுக்கு மிகவும் அழகியலாக தனது வாழ்த்தினைக் கூறியுள்ளார்.

குறிப்பாக அவரது வாழ்த்தில் யுவன் சங்கர் ராஜா பிறந்த தருணத்தையும், அப்போது இளையராஜா என்ன ட்யூன் போட்டுக்கொண்டு இருந்தார் எனவும் தமிழ் பிரபா தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளது என்பது வாசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் ஏற்படுதும் விதமாக உள்ளது. அதேபோல், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் அதன் பின்னர் யுவன் சங்கர் ராஜா என இவர்களை வரிசைப்படுத்திய விதம் பலரையும் கவர்ந்துள்ளது. கவிதை நடையில் தனது வாழ்த்தினைத் தொடங்கிய தமிழ் பிரபா, நாவல் நடையில் வாழ்த்தினை முடித்துள்ளார்.
வாழ்த்து: தமிழ் பிரபா தனது வாழ்த்துக் குறிப்பில் கூறியுள்ளதாவது,
"80'களில் காதலித்தவர்களுக்கு இளையராஜா
90'களில் காதலித்தவர்களுக்கு ரஹ்மான்
2000'களில் காதலித்தவர்களுக்கு யுவன்🤍🤍

கரங்கள்: செல்போன் இளைஞர்களிடம் புழங்கிய ஆரம்பத்தில் காதலிலும் ஒரு புதிய பாய்ச்சல் நிகழ்ந்தது. எளிதில், விரைவில் காதலைச் சொல்ல முடிந்த அதே சூழலில் அதற்கான நிராகரிப்பும், பிரிவும் அதே வேகத்தில் நிகழ்ந்தது. அக்காலக்கட்டத்தில் அந்த பிரிவின் வலியை ஒரு களிம்பாக இதயத்தில் பூசிவிட்ட கரங்கள் யுவனுடையது.✨

வயது வா வா எனச்சொல்ல தீண்ட தீண்ட அருகே சென்றபோது நெஞ்சோடு கலந்திட வைத்த வைத்தியன். காதல் மட்டுமின்றி, காதலுக்கும் காமத்திற்குமான ஊடாட்டத்தில் ஒரு ஊஞ்சல் பலகையாக இருந்து தாலாட்டிய தாயுமான(யு)வன். 🫂😌
ட்யூன்: ஒரு இசையமைப்பாளர் ஆழியார் அணையருகே உள்ள கட்டிடத்தில் நீண்ட நேரம் ஒரு ட்யூனுக்கு போராடிக்கொண்டிருந்தாராம். அப்போது சடாரென ஒரு ட்யூன் உதித்து அதை ஆர்மோனியத்தில் வாசிக்க ஆரம்பிக்கையில் கதவு தட்டப்பட்டதாம். தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி "அண்ணே.. உங்களுக்கு பையன் பிறந்திருக்கான்னு ஊர்ல இருந்து ஃபோன் வந்திருக்கு" என்றாராம். அதைக்கேட்ட அந்த இசையைப்பாளர் முகத்தில் புன்னகை மலர "Senoritta I love you.. my sweet heart you love me" என்கிற அந்த ட்யூனை மேலும் உற்சாகத்துடன் வாசிக்கத் துவங்கினாராம் 😍😍

இளையராஜா அமைத்த மிகச்சிறந்த ட்யூன்களில் ஒன்றான எங்கள் யுவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











