வானத்தப்போல மனம் படச்ச தமிழ் சினிமா.. மாறி மாறி வாழ்த்திக்கறாங்களேப்பா!
சென்னை: தமிழ் சினிமாவில் இருந்து இன்று அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி மூன்று படங்கள் ரிலீஸ் ஆகின்றது. தங்கலான், டிமான்ட்டி காலனி 2 மற்றும் ரகு தாத்தா என இந்த மூன்று படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்நிலையில் இந்த மூன்று படக்குழுவினரும் மற்றப் படக்குழுவினருக்கு படம் வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பொதுவாகவே ஒரு சினிமாவுக்கு எதிராக மற்றொரு சினிமா வருகின்றது என்றாலே, தயாரிப்பு நிறுவனத்தினர் தரப்பில் இருந்தோ, அல்லது படக்குழுவினர் தரப்பில் இருந்தோ இணக்கமான சூழல் என்பது இல்லாமல் எதிரிகளைப் போல் நடந்து கொண்ட காலகட்டம் இருந்துள்ளது. இந்த சூழல் இன்றைக்கும் அவ்வப்போது நடைபெறுவதைப் பார்க்க முடிகின்றது. அப்படியான நிலையில், விடுமுறை நாளை கருத்தில் கொண்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ள இந்த மூன்று படங்களில் பணியாற்றியவர்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்திக்கொண்டது பார்க்கவே, " அந்த வானத்தப்போல மனம் படச்ச மன்னவனே" என்ற பாடல் பின்னணியில் ஒலிப்பதுபோல் உள்ளது.
கீர்த்தி சுரேஷ்: அதாவது ரகு தாத்தா படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்தப் படமும் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தங்கலான் படத்திற்கும், டிமான்ட்டி காலனி 2 படத்திற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், " நான் கல்லூரி படித்த காலத்தில் எனது மேஜையில் அன்னியன் படத்தின் போஸ்டரை ஒட்டிவைத்திருந்தேன். இன்றைக்கு அவரது படம் ரிலீஸ் ஆகும் அதே காலகட்டத்தில் எனது படமும் ரிலீஸ் ஆவதைக் நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன். விக்ரம் சார், பா.ரஞ்சித் சார், என் அன்பிற்குரிய மாளவிகா மோகனன், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் தங்கலான் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

டிமான்ட்டி காலனி 2: அதேபோல் அதே பதிவில், டிமான்ட்டி காலனி 2 படத்திற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், " அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அஜய் ஞானமுத்து உள்ளிட்ட டிமான்ட்டி காலனி 2 படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார், மேலும், எனது ரகு தாத்தா படக்குழுவினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மிகப்பெரிய படங்களுக்கு மத்தியில் ரகு தாத்தா படமும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் என பதிவிட்டுள்ளார்.

தங்கலான்: அதேபோல் டிமான்ட்டி காலனி 2 படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தங்கலான் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், " சியான் விக்ரம் சாருக்கு வாழ்த்துகள். பா. ரஞ்சித் சார் நீங்க உருவாக்கியுள்ள உலகத்தைப் பார்க்க நானும் ஆவலுடன் இருக்கின்றேன். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார், இந்த படத்திற்காக அனைத்தையும் நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அது சினிமா மீது உங்களுக்கு உள்ள ஈடுப்பாட்டினைக் காட்டுகின்றது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவுக்கு ஸ்டூடியோ கிரீன் சார்பாக நன்றியும், டிமான்ட்டி காலனி 2 படத்திற்கு வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications











