Animal part 2: அனிமல் இரண்டாம் பாகம்.. களமிறங்கும் ரஜினி பட நடிகை!
சென்னை: அனிமல் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி பட நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், டிசம்பர் 1ம் தேதி வெளியான திரைப்படம் அனிமல்.
இப்படத்தில், அனில் கபூர், சுரேஷ் ஓப்ராய், ராஷ்மிகா மந்தனா, த்ரிப்தி டிம்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.

அனிமல்: அர்ஜுன் ரெட்டி படம் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அனிமல் படத்தை பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிப்பில், டி-சிரீஸ் வழங்கியுள்ளார். தன்னுடைய அப்பாவை கொல்ல நினைக்கும் கும்பலை, மகனான ரன்பீர் கேங்ஸ்டராக மாறி கொன்று குவிப்பதே படத்தின் கதை. இப்படத்திற்கு மனன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.
மகத்தான வசூல்: சுமார் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்த போதும், ஒரு சில சர்ச்சைக்குரிய காட்சிகளால் இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வந்தது. இருப்பினும், இப்படம் வெளியாகி 11 நாட்கள் ஆகி உள்ள நிலையில், உலகளவில் 737 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனிமல் பார்ட்2: இந்நிலையில், அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், இரண்டாம் பாகத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து நடிக்க நடிகை மாளவிகா மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பால், மாளவிகா இப்படத்தில் நடிக்க ஒகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.
தங்கலான்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன், பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக உடல் உடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறி இருந்தார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











