Thangalaan: தங்கலான் புரியாத வசனத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா? அதனாலதான் ரஞ்சித் இப்படி செய்தாரா?
சென்னை: தங்கலான் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிகொண்டு உள்ளது. படம் முதல் கட்டமாக தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டும் ரிலீஸ் ஆகியுள்ளது. வரும் 30ஆம் தேதியில் இருந்து ஹிந்தியிலும் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் லைவ் - சவுண்ட் முறை பின்பற்றப்பட்டுள்ளதால் படத்தில் விக்ரம் பேசும் சில வசனங்கள் புரியவில்லை என ரசிகர்கள் கூறினர். இந்நிலையில் படத்தின் திரைக்கதை அமைப்பாளர் மற்றும் இணை இயக்குநர் தமிழ்பிரபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரம் பேசுவதை வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில் இது தொடர்பாக, “ தங்கலான் அவ்வப்போது தனக்குள் பேசிக் கொள்கிறார். அது என்ன? அதன் வழியே அவருக்குள் ஓடும் தொன்மத்தின் நினைவுகள் எப்படி அவரை சமகாலத்தில் வழிநடத்துகின்றன என்பதை வசனக் கவிதைகளாக கவிஞர் மௌனன் யாத்ரிகா எழுதியவை இவைதான். படம் பார்த்தவர்களுக்கோ, பார்க்க இருக்கிறவர்களுக்கோ இந்த வாசிப்பு தங்கலானை மேலும் நெருக்கமாக, உணர்வுப்பூர்வமாக புரிந்து கொள்ள முடியுமென நம்புகிறேன்” என எழுதியுள்ளார்.

தங்கலான் தனக்குள் பேசிக்கொள்வது, “ பாறைகளைப் போத்திக்கொண்டு பேயுறங்கும் கதையறிவேன் அரவத்தின் தோளேறி தேள் மறிக்கும் என்றறிவேன்
சின்னஞ்சிறு வேட்டுவனாய் முன்ன வந்த மண் இதுவோ... கன்னங்கரு பெண்ணணங்கை கண்டு கொண்ட கண் எனதோ..
பங்காளி... வழிமறித்த காட்டாறும் புழுதி வீசும் புயற்காற்றும் கொத்த வந்த பாம்புகளும் கொடுக்கு நீட்டும் தேளினமும் இந்த மண்ணின் காவலர்கள்...
அங்காளி.. எதையும் பற்றி அச்சமில்லை பயந்து நமக்குப் பழக்கமில்லை உடும்பு ஜென்மமடா... பங்காளி
எலே பங்காளி பரந்து விரிந்திருக்கும் கடுந்தரை சாதாரண நிலமல்ல, எம் சாத்தானின் காவு, காதுகளைக் கூர் தீட்டிக் கேள், ஆயிரம் வண்டுகள் முரள்வதைப்போல் ஒர் அதிர்வு கேட்கிறது. இங்கேதான் எங்கோ முனியின் உடம்பு இருக்கிறது.
மண்ணில் இறங்கிய இடி வெள்ளைச் சாரையாய் உருமாறி பதுங்கியுள்ள இக்காட்டில் மண்ணால் மூடப்பட்டிருக்கும் பள்ளம் காண்.
அதில் ஒரு சதைக்கோளம் புரள்வதுபோல் ஒலி கேட்கிறது. எலே பங்காளி முதுகில் அழுத்தப்படும் துப்பாக்கி ஆழமான பாறையிடுக்கில் நம்மை இறங்க வைக்கிறது ரவை வெளியேறும் துளை வழியே நம் இதயத்தைக் குறி பார்ப்பவனுக்கு ஓர் உண்மை தெரியாது, இது உடம்பல்ல. பொன்.
துர்க்குறியின் நாற்றம் துளைக்கிறது மூக்கை, புதைந்துள்ள எலும்புகள் பூமியை முட்டி மேலேறி வந்து கணுக்காலைத் தழுவி இறுக்குவதுபோல் உணர்கிறேன்...
ஏலே பங்காளி, இருண்ட வாழ்வு மிரண்டோட திரண்டு எழுந்து சமராடு
பாவ புண்ணிய கணக்கெல்லாம் போர்க்கள புழுதியில் கிடையாது.
உன்னோடு இருக்கும் பகை தீர்க்கும் நேரம் கனிந்திருக்கு. குருதிச்சூடு குளிரும் முன்னே ஓ பேரணங்கை நான் விடுவதாயில்லை...
ஏலே பங்காளி.
உயிர்பலி கேட்கும் இச்சூன்ய நிலத்தில்
மாண்டவர் பற்றி புலம்பி பயனில்லை. நடுங்கும் தொடைத்தட்டி நம் நிலை மாற்ற முன்னேறு.
நம் பசியாற்ற வந்து நிற்கிறது காண் பலிமாடு துவண்டு கிடக்காதே துள்ளி எழுடா...
அங்காளி
வேட்டைக்கருவியை ஏந்துடா என் பங்காளி.
உயிரும் துச்சம உடம்ப முறுக்கிடுடா. அங்காளி நடைய முடுக்கிடுடா...
காடதிகாரம் இங்கே நிலவுது. காலடித்தடங்கள் எல்லாம் திரும்புது. இரத்த நாத்தம் நாசியில் முட்டுது. பங்காளி. பறையொலி எழுப்பு...
அதிவேக விலங்கொன்று புழுதிக்கு நடுவே எதிரே வரும் பார், அப்போது உணரலாம் அந்த ஊழிக்காற்றின் தாண்டவத்தை,
கரும்பாறைகள் ஊளையிடும், காட்டு மரங்கள் பிளந்து எரியும், தீய கணங்கள் எல்லாம் உள்ளிருந்து மண்ணை முட்டும்,
நூற்றுக்கணக்கான காலடிகள் அசுரத்தனமாய் ஓடிவரும், நாலா திசைகளிலிருந்தும் அம்புகள் பாய்ந்து வரும், குறுங்கற்கள் துள்ளும், கருந்தேள்கள் சினமுறும்...
கல்லைப் பொரட்டி பார்த்தோம் கடும் ஆழம் தோண்டிப் பார்த்தோம் உள்ளே ஒன்னுமில்லை ஒரு பொட்டு பொன்னுமில்லை
பூமிக்குள் தெய்வம் நின்று பொன்னைக் காக்கிறது பொன்னை கண்ணில் காட்ட கன்னி ரத்தம் கேட்கிறது
நாகர் குல கன்னி உன்னை பலிகொடுத்து ஒரு சொட்டு ரத்தம் விட்டால் மண்ணெல்லாம் பொன்னாகும் என் மக்கள் வாழ்வு வெளிச்சமாகும்
இருப்போர் உயிர் காக்க இறந்தாரின் இடம் காக்க பிணியில்லா வாழ்வை காக்க
நம் வாழ்வு சிறக்க போகுதடா பங்காளி” என விரிவாக குறிப்பிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் இந்த வசனத்திலேயே மொத்தம் கதையும் சொல்லப்படுவதால், இது தங்கலான் கதாபாத்திரம் தனக்குள்ளே பேசிக்கொள்வதைப்போல் வைத்தால்தான் சரியாக இருக்கும் என இயக்குநர் பா. ரஞ்சித் இவ்வாறு காட்சிப் படுத்தியதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றது.




Click it and Unblock the Notifications











