Thangalaan: திகிலாகவும், சந்தோஷமாகவும் இருக்கு! தங்கலான் குறித்து இணை இயக்குநர்கள் நெகிழ்ச்சி பதிவு
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி உள்ளிட்டோர் நடிப்பில் இன்று அதாவது ஆக்ஸ்ட் 15ஆம் தேதி வெளியாகியுள்ள படம் தங்கலான். மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதுமே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ள இந்தப் படத்திற்கு இவரது இசைக்காகவே தனி எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா, படத்தின் புரோமோசனுக்காக பல யூட்டூப் சேனல்களுக்கு பேட்டி அளிக்கும்போதும் சரி, நேற்று தங்கலான் படகுழு சார்பாக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதும் பாராட்டவர்களில் படத்தின் இணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களை நினைவு கூர்ந்து பாராட்டப்பட்டனர். இந்நிலையில் படத்தில் பணியாற்றிய இணை இயக்குநர்கள் படத்தில் பணியாற்றியது தொடர்பாக நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளனர். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

தமிழ் பிரபா: படத்தின் இணை இயக்குநரும் எழுத்தாளருமான தமிழ்பிரபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " தங்கலான். நாளை (அதாவது ஆகஸ்ட் 15) வெளியாக இருக்கிறது. இந்நேரத்தில் இத்திரைப்படத்தின் எழுத்துப் பயணம் துவங்கிய தருணத்தை மீட்டுருவாக்கம் செய்து பார்க்கும்போது சற்று உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது. ஒரு கலைஞன் தான் எழுதிய கதையை இன்னொருவரை நம்பி கையளிக்கும்போது அந்த நம்பிக்கையின் ஒளி அளிக்கின்ற நெகிழ்வுதான் நான் இப்படத்தில் செலுத்திய உழைப்பு. மேலும் மேலும் ஒரு உலகத்தை, உருவாக்கி அழித்து ஆடிப்பார்த்த புனைவுக் களியாட்டம் என்றே இதைச் சொல்லுவேன். இந்த ஆட்டத்தின்போது நிகழ்ந்த வாக்குவாதங்கள், கதாப்பாத்திரங்களின் எண்ணங்களை ஊடுருவிப் பார்ப்பதில் இருக்கும் முரண்கள், ஒரு மாபெரும் வரலாறைப் புனைவாக்கும்போது எழுத்தாளன் தன் சுதந்திரத்தில் புரண்டுப்படுத்த சொகுசு என எண்ணற்ற நினைவுகள் ஒரு குவிமையத்தில் நிற்கின்றன.

சார்பட்டாவுக்குப் பின்: சார்பட்டாவுக்குப் பிறகு இயக்குனர் இரஞ்சித்துடன் நான் திரைக்கதை வசனம் எழுதி வெளிவரும் படம் இது. ஒரு இயக்குனருடன் இணையும் பயணத்தில் சரியாகக் கிடைக்கூடிய பெயர் வெகுமானம், பொருளியல் நிறைவு இவற்றிற்கு அப்பாற்பட்ட ஞானச்செருக்கில்தான் ஒரு எழுத்தாளன் வாழவேண்டுமென்பது என் அபிப்ராயம். அப்போதுதான் அவனைச் சூழும் கீழ்மைகளை பொருட்படுத்தாது ஒரு நிமிர்வுடன் அவன் வாழ முடியும். அதே சமயம், இவற்றிற்கு இணையாக இன்னொன்று இருக்கிறது. அது அந்த இயக்குனருடன் எழுதிப் பயணிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள். அவையே நாம் வாழும் காலத்தை மேலும் பொருள் உள்ளதாய் ஆக்குகின்றன. வாழ்வின் நினைவுச்சேகரத்தை புரட்டும்போது புன்னகை தரக்கூடிய காலமாய் இருக்கப்போகின்றன. மேற்கூரிய எல்லா வகையிலும் என் வாழ்வை பொருளுள்ளதாய் மாற்றிய இரஞ்சித்திற்கும், இத்திரைப்படத்தில் எங்களுடன் இணைந்து வசனம் எழுதிய அண்ணன் அழகிய பெரியவனுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உழைப்பு: எழுத்தாளர்கள், தொழிற்நுட்ப கலைஞர்கள், நடிகள் உட்பட எல்லோரும், இரண்டாண்டு காலம் உழைத்திருக்கிறோம். குறிப்பாக நடிகர்கள் எவ்வளவு இரத்தமும் வேர்வையும் சிந்தினோம் மேடைதோறும் சொல்கிறார்கள். இந்த 'உழைப்பு' என்பதை எல்லோரும் மீண்டும் மீண்டும் சொல்லி படம் பற்றிய உங்கள் மதீப்பிடுகளுக்கு ஒரு சலுகையாக அதை சொருக முயலவில்லை. அதேசமயம், இந்த திரைப்படம் உருவான பின்னணியை, அதன் வரலாற்றை நீங்கள் அறிந்து கொண்டு பார்க்கும்போது இதில் பங்கு பெற்றவர்களை இந்த படைப்பை நீங்கள் மேலும் மரியாதையுடன் அணுக வேண்டுமென எதிர்ப்பார்க்கிறோம். தங்கலான் உங்களுக்கு கொடுக்கும் அனுபவம் மகிழ்ச்சி ஏமாற்றம் எதுவாகினும் முதல்வேலையாக திரையரங்கில் சென்று பார்த்து எங்கள் உழைப்பை அங்கீகரிக்க வேண்டும் என விரும்புகிறோம்.
திகிலாக இருக்கு: நண்பர்களே, தங்கலான் நாளை (ஆகஸ்ட் 15) முதல் உங்களுடையது. காலம் அளித்த அனுபவத்தை ஒரு கலையாக திருப்பி அளித்துவிட்டோம் இனி தள்ளிநின்று வேடிக்கப்பார்ப்பதுதான் சற்று திகிலாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது" என பதிவிட்டுள்ளார்.
அன்பு சாக்கியன்: அதேபோல் மற்றொரு இணை இயக்குநர் அன்பு சாக்கியன் படத்தில் பணியாற்றியது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " அண்ணன் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான 'தங்கலான்' நாளை (அதாவது ஆகஸ்ட் 15) வெளியாகிறது. மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான மனநிலை ஆட்கொண்டுள்ளது. திரைக்கதைக்கான கருப்பொருள் மற்றும் மேலதிக தகவல்களை சேகரிக்கும் ஆய்வுப்பணியில் என்னை அமர்த்தி ஊக்குவித்த அண்ணன் பா.இரஞ்சித் அவர்களுக்கு எத்துணை நன்றிகள் சொன்னாலும் தகும். ஏனெனில், பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுப்படிப்பை முடித்த நிறைவை தந்தது 'தங்கலான்' படத்திற்கான ஆய்வுப்பணி.
வரலாறு: செவிவழி மரபுக் கதைகள், தொன்மங்கள், பௌத்தம், வரலாறு, அரசியல், நாட்டார் தெய்வ வழிபாடு, சூழலியல், இனவரைவியல் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கமாக கொண்டு அண்ணன் பா.இரஞ்சித் அவர்களால் புனையப்பட்ட மாய எதார்த்தவாத வரலாற்று படைப்பு. பிரதான நடிகர்கள், துணை நடிகர்கள், தொழிற்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள். ஆகச்சிறந்த படைப்பாளியின் பட்டறையில் இணை இயக்குனராக அடியேன் பணியாற்றியுள்ளேன். மிக்க நன்றிகள் இரஞ்சித் அண்ணா... வரலாற்றில் மறைக்கப்பட்ட இனம், தனக்கான வரலாற்றைத் தானே எழுதும் - மாமேதை அம்பேத்கர். ஜெய்பீம் 💙-அன்பு சாக்கியன்" என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











