Thangalaan - மதுரைக்கு ஷிஃப்ட் ஆகும் தங்கலான்.. எப்போதிருந்து ஷூட்டிங் தெரியுமா?
சென்னை: Thangalaan (தங்கலான்) பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் தங்கலான் படத்தின் ஷூட்டிங் பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முகத்தை வெகுவாக மாற்றிய இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் கடைசியாக இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படம் தோல்வியை சந்தித்தது. பக்குவமான இயக்குநர் முகநூல் போஸ்ட்களை பார்த்து கதை எழுதியதுபோல் படம் இருந்ததாக ரசிகர்கள் வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைத்தனர். மேலும், துஷாரா ஏற்றிருந்த ரெனே கதாபாத்திரமும் கடும் விமர்சனத்தை சந்தித்தது.
தங்கலான்: நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு பிறகு விக்ரம், பார்வதி, பசுபதி உள்ளிட்டோரை வைத்து தங்கலான் படத்தை இயக்கிவருகிறார். பா.இரஞ்சித்தும் விக்ரமும் இணைந்திருப்பதால் இந்தப் படம் கண்டிபாக கோலிவுட்டின் அடையாளமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்விதமாக தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவும் அமைந்திருக்கிறது.

கதை என்ன?: கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்க வயலை மையப்படுத்தி கமர்ஷியலாக வெளிவந்து சக்கைப்போடு போட்டது கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களும். பா.இரஞ்சித்தும் அதே கேஜிஎஃப்பை தொட்டிருக்கிறார். ஆனால் 1870ஆம் ஆண்டு முதல் 1940ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் கேஜிஎஃப்பில் வாழ்ந்த பழங்குடி மக்கள் பற்றி படமாக்கியிருக்கிறார் இரஞ்சித். இதனால் இது வேறு தளத்தில் இருக்கும் என நம்பப்படுகிறது.
விலா எலும்பு முறிவு: இப்படிப்பட்ட சூழலில் கடந்த மாதம் தங்கலான் படத்தின் ஷூட்டிங் ரிகர்சலின்போது விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது வீட்டில் ஓய்வில் இருந்த அவர் சமீபத்தில் இயல்பு நிலைக்கு திரும்பினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. இதற்கிடையே, தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப பா.இரஞ்சித் திட்டமிட்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.
ஷூட்டிங் எப்போது?: இந்தச் சூழலில் விக்ரம் முழுவதுமாக காயத்திலிருந்து மீண்டுவிட்டதால் எப்போது தங்கலான் ஷூட்டிங் தொடங்கும் என்ற கேள்வி எழுந்திருந்தது. சமீபத்தில் நடந்த மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவின்போது பேசிய இரஞ்சித், தங்கலான் படப்பிடிப்பு ஜூன் 15ஆம் தேதி தொடங்கும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் தங்கலான் படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் நாளை மறுநாள் (ஜூன் 15) மதுரையில் தொடங்கவிருக்கிறது. இந்த ஷெட்யூலானது மொத்தம் 12லிருந்து 15 நாட்கள்வரை நடக்கலாம் என கூறப்படுகிறது.
சார்பட்டா 2: தங்கலான் படத்தை பா.இரஞ்சித் முடித்துவிட்டு மெகா ஹிட்டடித்த சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறார். அந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்திருக்கிறது. தங்கலான் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











