முதல் காதலும்.. அதன் அவஸ்தையும்.. ரீ ரிலீசாகும் அழகி.. எப்போ தெரியுமா?
சென்னை: தங்கர் பச்சான் இயக்கத்தில், பார்த்திபன், நந்திதா தாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற அழகி திரைப்படம் புதிய தொழில்நுட்பத்துடன் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. இந்த தகவலை இயக்குநர் பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தங்கர் பச்சான் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் அழகி. இப்படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, மோனிகா, விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நந்திதா தாஸ் நடித்திருந்தார்.

காதலை கொண்டாடிய படம்: அழகி திரைப்படம் வெளியாகி இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆனப்போதும் இந்த படம் இன்னமும் மனதோடு கதை பேசிக்கொண்டுதான் இருக்கிறது. மனதிற்குள் எத்தனைக் காதல் வந்தாலும், மனதில் முளைவிட்ட அந்த முதல் காதல் மனதை விட்டு என்றும் அழியாது. காதலின் பிரிவு, தோல்வி, அது தரும் வலியில் சிக்கி தவிக்காதவர்கள் எவரும் இல்லை. அறியாப் பருவத்தில் தெரியாமலே நம் மனதுக்குள் புகுந்து குடிகொண்டுவிடுகிற காதலும் காலாகாலத்துக்கும் அது பண்ணுகிற அவஸ்தைகளும் தான் அழகி திரைப்படத்தின் ஒன்லைன் கதையாகும். தேவதாஸ் பார்வதிக்கு பின் சண்முகம் தனலட்சுமி என்ற அளவில் அந்த படத்தை கொணடாடாதவர்களே இல்லை எனலாம்.
ஒளியிலே தெரிவது தேவதையா: இப்படம் சிறந்த திரைப்படத்துக்கான பிலிம் ஃபேர் விருதை வென்றது. இப்படத்தில் இடம்பெற்ற பாட்டுச் சொல்லி என்ற பாடலுக்காக சாதனா சர்கம் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை வென்றார். இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தின் மகத்தான வெற்றிக்கு முக்கிய காரணம் இளையராஜா தான். "ஒளியிலே தெரிவது தேவதையா'' என மனதிற்குள் வந்த தனலட்சுமி கதாபாத்திரம் படம் முடிந்த பிறகும் மனதை விட்டு இறங்க மறுத்ததே நந்திதாதாஸின் நடிப்பிற்கும் அழகி படத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

ரீ ரிலீஸ்: இந்நிலையில் அழகி திரைப்படம் மார்ச் 29ம் தேதி 4K, 5.1 தொழில்நுட்பத்துடன் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. இதனை பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 22 வருடங்களுக்குப் பிறகு படம் வரும் மார்ச் 29ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட தரத்துடன் வெளியாகிறது. இயக்குநர் வெங்கட் பிரபுவும் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தப் படத்தின் மறுவெளீயீட்டு போஸ்டரைப் பகிர்ந்துள்ளார். அண்மைக்காலமாக ரீ ரிலீஸ் ஆகும் படங்களுக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது அழகி திரைப்படமும் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications











