Thangar Bachan Son : தங்கர் பச்சான் மகனுக்கு டும் டும் டும்.. திருப்பதியில் நடந்தாலும்.. தமிழன்னு காட்டிட்டாரே
திருப்பதி: பிரபல திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் திருமணம் திருப்பதியில் பாரம்பரிய முறையில் கோலாகலமாக நடைபெற்றது. இன்று அதாவது ஜனவரி 28ஆம் தேதி நடந்த இந்த திருமணத்தில், முழுக்க முழுக்க தமிழ் மந்திரங்கள் ஓதப்பட்டு நடத்தப்பட்ட சிறப்பம்சம், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே, தங்கர் பச்சான் அரசியல் தலைவர்களையும், திரையுலகப் பிரபலங்களையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ்களை வழங்கி வந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்நிகழ்வு எளிமையாக திருப்பதியில் நடைபெற்றது.
திருப்பதியில் நடைபெற்ற இந்நிகழ்வு, தமிழ் மரபுகளையும் பண்பாட்டையும் மையமாகக் கொண்டது. சமஸ்கிருத வேத மந்திரங்களுக்குப் பதிலாக முழுக்க முழுக்க தமிழ் மந்திரங்கள் ஓதப்பட்டன. இம்முயற்சிக்கு திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் பாராட்டு தெரிவித்ததுடன், மணமக்களை மனதார வாழ்த்தினர். தமிழ்ப் பண்பாட்டை முன்னெடுத்த இந்தத் தனித்துவமான அணுகுமுறை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தங்கர் பச்சான் திரைவாழ்க்கை: தங்கர் பச்சான் தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளிகளில் ஒருவர். பார்த்திபன் நடித்த 'அழகி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், 'சொல்ல மறந்த கதை', 'பள்ளிக்கூடம்', 'ஒன்பது ரூபாய் நோட்டு', 'அம்மாவின் கைப்பேசி' போன்ற சமூக உணர்வுள்ள பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்து, வாழ்க்கை, குடும்பம், மனித உறவுகள் சார்ந்த படைப்புகளுக்குப் பெயர் பெற்றவர்.
விஜித்: தங்கர் பச்சானின் மகனான விஜித், 2022ஆம் ஆண்டு 'டக்கு முக்கு டிக்கு தாளம்' படத்தின் மூலம் நாயகனாகக் களமிறங்கினார். அத்திரைப்படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அவரது அறிமுக மற்றும் இசை வெளியீட்டு விழா பிரபலங்களின் பங்கேற்பால் கவனம் பெற்றது. 'விஜித்' என்ற பெயர், விஜய் மற்றும் அஜித் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் பெயர்களின் பகுதியைக் கொண்டு உருவானதா என்ற கேள்வி அந்நிகழ்வில் பேசுபொருளானது.
தமிழ் மந்திரங்கள்: ஆடம்பரத்தைத் தவிர்த்து, தமிழ் மந்திரங்களுடன் எளிமையாக நடந்த இந்தத் திருமணம் சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. தமிழ்ப் பண்பாட்டை முன்னிலைப்படுத்திய தங்கர் பச்சானின் இந்த முயற்சி திரையுலகை கடந்து, சமூகச் சிந்தனை கொண்ட ஒரு கலைஞராக அவரை மீண்டும் நிரூபித்துள்ளது என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











