twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்!

    |

    சென்னை : நீங்கள் கூறுவதையெல்லாம் நாங்கள் கேட்கிறோம். எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள் என்று இயக்குனர் தங்கர்பச்சான் உருக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி முதன் முதலாக கொரோனா ஆட்கொல்லி குறித்த செய்தி வெளியானாலும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் தான் 'கொரோனா' எனும் சொல் ஊடகங்களில் பரவலாக வெளிவரத்தொடங்கின. பிப்ரவரி 1, 2 தேதிகளில் சீனாவின் வுஹான் நகரில் சிக்கியிருந்த 654 இந்தியர்களை இந்திய அரசு விமானங்கள் மூலம் மீட்டுகொண்டு வந்தது. அதாவது இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய அரசு துரிதமான நடவடிக்கையை மேற்கொண்டது.

    கேப்ஷன்லாம் நல்லாதான் இருக்கு...முதல்ல டிரெஸ்சை போடுங்க... பிரபல ஹீரோயினை விளாசும் நெட்டிசன்ஸ்!கேப்ஷன்லாம் நல்லாதான் இருக்கு...முதல்ல டிரெஸ்சை போடுங்க... பிரபல ஹீரோயினை விளாசும் நெட்டிசன்ஸ்!

    Thangar bachan statement

    இந்நிலையில் தான் பிப்ரவரி 24, 25 ஆம் தேதி இரண்டு நாட்கள் பயணமாக அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார் எனும் செய்தியையும் இந்திய அரசு அறிவித்தது. மூன்று வாரங்கள் இரவு பகலாக பணியாற்றி அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை இந்திய அரசு செய்தது. இலட்சக்கணக்கான மக்களுடன் சேர்ந்து நம் இந்தியப் பிரதமர் அமெரிக்க அதிபரை வரவேற்று உலகே திரும்பிப்பார்க்கும் படி நிகழ்ச்சிகளை நடத்தினார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வரும் முன்பிருந்த காலக்கட்டங்களில் நூற்றுக்கணக்கில் நாள்தோறும் கொரோனா நோய்க்கு சீனாவிலும் மற்ற நாடுகளிலும் பலியாகிக்கொண்டிருந்தனர். கேரளா போன்ற இன்னும் பிற மாநிலத்திலும் நோய் பரவத்தொடங்கியிருந்தது. உலகில் பல நாடுகளுக்கும் பரவத்தொடங்கியதில் அத்தனை நாடுகளும் தற்காப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு போராடிக்கொண்டிருந்தன.

    கொரோனா வைரஸிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அமெரிக்க அதிபர் எச்சரிக்கைச் செய்தியை அறிவித்தார். சில கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஈரான், இத்தாலி நாடுகளெல்லாம் தாக்குதலுக்குள்ளாகி கதறிக்கொண்டிருந்தபொழுது 130 கோடி மக்களுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நம் இந்தியாவில் அந்நேரத்தில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை அறிய அந்நாட்களில் வெளியான ஊடகச்செய்திகளை பின் நோக்கிப்பார்த்தால் புரியும்.

    அமெரிக்க அதிபரை வரவேற்கும் ஏற்பாடு, ஜக்கி வாசுதேவ் நடத்தும் பக்தர்கள் வழிபாட்டை குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைக்கும் மகா சிவராத்திரி விழா, நடிகர் ரஜினிகாந்த் அறிவிக்கப்போகும் அரசியல் கட்சி பற்றிய செய்திகள், விவாதங்கள் இவைகளில் மட்டுமே அனைவரும் கவனம் செலுத்தி செய்திகளை வெளியிட்டனர்.

    இதனிடையில் அவ்வப்போது வெளிவரும் சின்னச்சின்ன செய்திகளைக் கண்டு நம் மக்களும் 'கொரோனா வைரஸ் யாரையோ கொன்று கொண்டிருக்கிறது! நமக்கெல்லாம் அது வரவே வராது' என நினைத்துக்கொண்டிருந்தனர்.

    கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு விமானம் மூலமாகவும் மிகச்சிறிய அளவு கப்பலில் பயணம் செய்தவர்கள் மூலமாகவும் மட்டுமே பரவியது. சீனாவின் வுஹான் நகரில் சிக்கியிருந்த மக்களை அழைத்து வந்த நாளான பிப்ரவரி 1, 2 ஆம் தேதிகளிலிருந்தே இந்தியாவுக்குள் நுழையும் அனைத்து விமானங்கள் மற்றும் கப்பல்களில் மிகத்தீவிரமான சோதனைக் கட்டுப்பாடுகளை விதித்து அத்தனைப்பேரையும் தனிமைப்படுத்தியிருக்க வேண்டும்.

    50 நாட்கள் கழித்து இப்பொழுது 130 கோடி மக்களை வீட்டுக்குள் முடக்கிய அரசு, உடனடியாக கொரோனாவை இறக்குமதி செய்த விமான, கப்பல் போக்குவரத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட நடவடிக்கையைத்தான் அப்பொழுது சீன மேற்கொண்டது. சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் மூலம் வைரஸ் பரவி விடும் என்பதால் அனைத்து போக்குவரத்தையும் தடைசெய்து 90 கோடி மக்களை வளையத்திற்குள் கொண்டு வந்தது.

    இந்திய ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் நாடாளுமன்றம், சட்டமன்றம் நடத்துவதிலும், அவரவர்களுடைய கட்சியை வளர்ப்பதிலும் முனைப்போடு இருந்துவிட்டு இப்பொழுது வந்து ஆளாளுக்கு மக்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறனர். இப்பொழுது 24 மணி நேரமும் மக்களை உறங்க விடாமல் செய்துகொண்டிருக்கும் ஊடகங்கள் இதற்கான விழிப்புணர்வை அப்பொழுது அரசுக்கும், மக்களுக்கும் ஏற்படுத்தத் தவறி விட்டன!. உலகம் முழுக்க நிகழ்ந்த கொரோனா பலிச்செய்திகளை வெளியிட்டுக்கொண்டே நேரலையில் அமெரிக்க அதிபரையும், இந்திய பிரமதரையும், ரஜினிகாந்தையும் துரத்திக்கொண்டிருந்தார்கள். அமெரிக்க அதிபரின் வரவால் இந்திய நாடு மாபெரும் வளர்ச்சியை அடையப்போகிறது எனவும் செய்தி வெளியிட்டார்கள்.

    Thangar bachan statement

    கொரோனாவை அலட்சியப்படுத்தியவர்களும், ஊடகங்களும் தான் கொரோனாவின் தீவிரத்தை மக்கள்தான் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என இப்பொழுது குறைபட்டுக் கொள்கிறார்கள். இருக்கப்பட்டவர்கள் மூன்று வாரம் என்ன, இன்னும் மூன்று மாதங்கள், மூன்று ஆண்டுகள் ஆனாலும் வீட்டுக்குள் இருந்தே உயிர் வாழ்ந்து விட முடியும். தினம் வெளியில் ஓடி உழைத்தால் மட்டுமே பிழைக்க முடியும் எனும் நிலையில் வெறும் கை கால்களை நம்பியுள்ள 75 கோடி மக்கள் நம்நாட்டில் இருக்கிறார்கள். இம்மக்களுக்கான உயிர் பாதுகாப்பு, மூன்று வேளை உணவு, அடிப்படைத் தேவைகளை எவ்வாறு எங்கிருந்து தரப்போகிறார்கள்?

    ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டத்தில் அல்லல்பட்டு குடும்பம் நடத்தி வயிற்றைக் கழுவி வந்த மக்கள் இப்போது உயிரை எவ்வாறு காப்பாற்றிக்கொள்வது எனும் கூடுதலான மனச்சுமையால் இடிந்துபோய் கிடக்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு இம்மக்களால் பிழைப்பின்றி வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க முடியும் என்பது தெரியவில்லை. நிலைமை மீறும்பொழுது தன் உயிர் போனாலும் பரவாயில்லை, பிள்ளைகள், மனைவி, தாய் தந்தையரைக் காப்பாற்ற வேறுவழி தெரியாமல் வீதிக்குள் இறங்குவார்கள். அதற்குள்ளாக அவர்களின் தேவைகள் தீர்க்கப்பட வேண்டும். இதற்காக என்னென்னத் திட்டங்கள் அரசிடம் இருக்கிறது எனத் தெரியவில்லை. ஒருபக்கம் நோய் பரவுதலின் மின்னல் வேகத்தீவிரம்! மற்றொரு பக்கம் மக்களின் உயிர் காப்புப் போராட்டம்! இரண்டையும் அரசுதான் தீர்க்க வேண்டும். அரசு அறித்துள்ள உதவித்தொகையும், உணவுப்பண்டங்களும் கூடிய வரை அவரவர் வீடுகளுக்கே சென்றடைய உடனே ஏற்பாடு செய்ய வேண்டும்.

    Thangar bachan statement

    மூடியுள்ள மதுபானக்கடைகள் மீண்டும் திறக்கப்படலாம் எனும் செய்தி கசிகின்றது. தயவு செய்து உங்கள் கால்களில் விழுந்து கேட்கிறேன். அரசாங்கம் நடத்த பணம் போதவில்லை, அதனால்தான் மதுக்கடைகளை திறக்க வேண்டியிருக்கிறது எனும் காரணத்தைக்கூறி மீண்டும் திறந்து விடாதீர்கள். எங்களிடமிருந்து உயிரைத்தவிர எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்! மதுக்கடைகளைத் திறந்தால் ஏற்படும் பாதிப்புகளை கற்பனையில் கூட நினைத்துப்பார்க்காத அளவுக்கு கொண்டு போய் விட்டு விடும். நீங்கள் சொல்கிறபடி இப்பொழுதே சொல்வதை கேட்காத மக்கள் குடித்து நிதானத்தை இழப்பார்கள்! வைரஸ் பரவ மேலும் மேலும் அது வழி வகுத்து விடும்!

    உலகில் மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வப்போது இப்படிப்பட்ட கொரோனா போன்ற நோய்களை சந்தித்துதான் மனித இனம் தப்பிப்பிழைத்து வந்திருக்கிறது. நம் நாட்டிலுள்ள வெப்பநிலை மக்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதில் உண்மையில்லாமல் இல்லை. இதுதான் தற்போதைக்கு நமக்கெல்லாம் இருக்கின்ற ஒரே ஒரு சிறிய நம்பிக்கையும் ஆறுதலும்!

    Thangar bachan statementThangar bachan statement

    அமெரிக்க வல்லாதிக்க அரசே ஏப்ரல் மாதத்திற்குள் செயற்கை மூச்சு தந்து உயிர்பிடித்து வைத்திருக்கும் வெண்டிலேட்டர் கருவிகளை 6 ஆயிரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என கூறியிருக்கிறது. இத்தனை லட்சம் மக்களுக்கு நாம் எத்தனைக் கருவிகளை வைத்திருக்கிறோம் என்பது யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்.

    நடந்து முடிந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதால் இந்த ஏழை எளிய மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. நீங்கள் கூறுவதையெல்லாம் நாங்கள் கேட்கிறோம்! நாங்கள் எதிர்பார்ப்பதை நீங்கள் ஒரு நொடிகூட தாமதிக்காமல் உடனே மேற்கொள்ளுங்கள். எங்களின் உயிரைக்காப்பாற்றுங்கள்!

    English summary
    Thangar Bachchan has made a bold statement to the government
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X