என் பெயரில் போலிச் செய்திகளை பரப்புவதா..? சட்ட நடவடிக்கை எடுப்பேன்.. தங்கர் பச்சான் எச்சரிக்கை!
சென்னை: தனது பெயரில் போலிச் செய்திகள் உலவுவதாக இயக்குனர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.
தமிழில் காதல் கோட்டை, காலமெல்லாம் காதல் வாழ்க, கண்ணெதிரே தோன்றினாள் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர், தங்கர்பச்சான்.
அழகி, சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு உட்பட சில படங்களை இயக்கி இருக்கிறார்.

டக்கு முக்கு டிக்கு தாளம்
இப்போது அவர் மகன் விஜித் பச்சான் நாயகனாக நடித்துள்ள, டக்கு முக்கு டிக்கு தாளம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. இதற்கிடையே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்மை காலமாகவும்கடந்த காலங்களிலும் என் உருவ படங்களை பயன்படுத்தியும், என் பெயரை பயன்படுத்தியும் போலிச் செய்திகள் உலவுகின்றன.

போலிச் செய்திகள்
'சாத்தான் குளம் தந்தை மகன் இருவரின் மரணங்கள்' குறித்த என் பெயரில் உலவும் செய்தி ஒன்றை நண்பர் அனுப்பி வைத்திருந்தார். இன்றுவரை இது குறித்த எந்த கருத்தையும் நான் தெரிவிக்காத நிலையில், இப்படிப்பட்ட செய்தியை வெளியிட்டவர் தண்டனைக்கு உள்ளாவார். இணைய கூலிகள் அதிகரித்துள்ள இவ்வேளையில் இதுபோன்ற போலிச் செய்திகளை இனிமேலும் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

இறுதி எச்சரிக்கை
அது என் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என உணர்ந்தபடியால் இந்த இறுதி எச்சரிக்கையை விடுக்கின்றேன். நான் பேசினாலும், எழுதினாலும், அறிக்கை விடுத்தாலும் எனது கைப்பேசி எண்கள் தொடர்பின் மூலம் இயங்கும் வாட்ஸ் அப், எனது டிவிட்டர், பேஸ்புக்-கில் மட்டுமே அச்செய்திகள் வெளிவரும்.

சட்டப்பூர்வ நடவடிக்கை
இவற்றில் வெளிவரும் செய்திகள் மட்டுமே அச்சு ஊடகங்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் தரப்படும். இனி என்னுடைய பெயரில் எந்த போலிச் செய்திகள் வெளிவந்தாலும் அதை வெளிப்படுத்துபவர்கள் மேல் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை இறுதி எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











