தை பிறந்ததும் தங்கர் பச்சான் மகன் திருமணம்.. பெரிய தலைகளுக்கு எல்லாம் ஓடோடி பத்திரிகை வச்சுட்டாரே!
சென்னை: இயக்குநர் தங்கர்பச்சான் தனது மகன் விஜித் திருமணத்தை விரைவில் நடத்தவுள்ளார். இந்நிலையில், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விஐபிக்கள் உள்ளிட்டவர்களை தேடித் தேடிச் சென்று அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு அழைத்து வருகிறார்.
பார்த்திபன் நடித்த அழகி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் தங்கர் பச்சான். அந்த படத்தைத் தொடர்ந்து சேரனின் சொல்ல மறந்த கதை படத்தையும் இயக்கி ரசிகர்களை கண் கலங்க வைத்தார். பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

அவர் தனது மகன் விஜித்தை, 'டக்கு முக்கு டிக்கு தாளம்' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நாயகனாக கடந்த 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். ஆனால், விஜித்துக்கு சினிமாவில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
ஹீரோவான விஜித்: நடிகர் விஜித்தின் அறிமுக விழா மற்றும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஒரே நேரத்தில் நடைபெற்றன. அந்த நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன், கஸ்தூரி ராஜா, இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் பிக் பாஸ் ஆரி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு விஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். பல்வேறு பிரபலங்கள் பேசுகையில், விமர்சனங்களை சந்திக்கத் தயங்கக் கூடாது எனப் பேசியது கவனத்தை ஈர்த்தது.
முன்னதாக, தங்கர்பச்சான் 'மழைச்சாரல்' படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அஜித்தின் 'காதல் கோட்டை' மூலம் பிரபலமான இவர், பார்த்திபனின் 'அழகி' மூலம் இயக்குநரானார். 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' படத்தில் கதாநாயகனாகவும் நடித்த தங்கர்பச்சான், அடுத்ததாக தனது மகனை நடிகராக அறிமுகப்படுத்தினார்.

விஜய் அஜித் காம்போ: விஜய் பெயரில் இருந்து 'வி' மற்றும் அஜித் பெயரில் இருந்து 'ஜித்' எடுத்து விஜித் என்கிற பெயர் உருவானதா என்றும் அவர் ஹீரோவாக அறிமுகமான பட விழாவில் சில இயக்குநர்களே கேள்வி எழுப்பினர். இந்நிலையில், விஜித் தற்போது மாப்பிள்ளையாக மாஸ் காட்ட காத்திருக்கிறார். தை பிறந்தால் அவரது திருமணம் கோலாகலமாக நடைபெற காத்திருக்கிறது.
முதலமைச்சருக்கு அழைப்பிதழ்: தங்கர் பச்சான் தனது மனைவி தழிழ்ச்செல்வியுடன் சேர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வைத்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

தலைவர்களுக்கு அழைப்பிதழ்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுக்கு திருமண அழைப்பிதழை வைத்துள்ளார். சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் வைக்க உள்ளார். இன்னொரு பக்கம் பிக் பாஸ் ஜூலியும் அவரது திருமணத்தை முன்னிட்டு பல முன்னணி பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ்களை வைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











