69th National Awards Ceremony - 69ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழா.. விருது வாங்கியவர்கள் விவரம்
டெல்லி: 69th National Awards (69ஆவது தேசிய திரைப்பட விருதுகள்) 69ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
இந்திய திரைத்துறையில் அனைவருமே பெற விரும்பும் விருது தேசிய விருது. அந்த விருதை பெற்றால் தேசிய அளவில் அடையாளப்பட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். இதற்காக பல படைப்பாளிகள் கடுமையாக உழைத்து படங்களை கொடுப்பது வழக்கம். இந்தச் சூழலில் 2021ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டன. விருது பட்டியலில் 2021ஆம் ஆண்டுக்கு முன்னர் தணிக்கை பெற்ற படங்கள் இடம்பெற்றிருந்தன.

விருதுகள் அறிவிப்பு: அதன்படி தமிழிலிருந்து இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி படத்துக்கு ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் தேசிய விருது கிடைத்தது. அதேபோல் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தில் மாயவா என்ற பாடலை பாடியதற்காக ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
ஸ்ரீகாந்த் தேவாவுக்கு விருது: இவைகளை தவிர தமிழுக்கு விருதுகள் கிடைக்கவில்லை. அதேசமயம் நான் ஃபியூச்சர்டு பிலிம் கேட்டகிரியில் கருவறை படத்துக்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கும், சிறந்த கல்வி படமாக சிற்பிகளின் சிற்பங்கள் படத்துக்கும் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேறு யார் யாருக்கு விருது: மேலும், சிறந்த பின்னணி பாடகராக ஆர்ஆர்ஆர் படத்தில் பாடிய கால பைரவா, சிறந்த இசையமைப்பாளராக புஷ்பா படத்துக்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத், சிறந்த பின்னணி இசையமைப்பாளராக ஆர்ஆர்ஆர் படத்துக்கு இசையமைத்த கீரவாணி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.. மேலும் மோஸ்ட் பாப்புலர் பிலிம் என்ற கேட்டகிரியில் ஆர்ஆர்ஆர் படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நடிகராக புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜுன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேலும் சிறந்த படமாக மாதவன் இயக்கி நடித்த ராகெட்ரி படம் தேர்வானது.

விருதுகள் வழங்கும் விழா: இந்நிலையில் இன்று தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல்.முருகன், ஜூரிக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதனையடுத்து விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மேடைக்கு வரவழைக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
அதன்படி கடைசி விவசாயி மணிகண்டன், ஸ்ரீகாந்த் தேவா, சிற்பிகளின் சிற்பங்கள் இயக்குநர், ஸ்ரேயா கோஷல் ஆகியோர் விருதுகளை பெற்றுக்கொண்டனர். மணிகண்டன் வெள்ளை சட்டை அணிந்துகொண்டு கூலாக வந்திருந்தார். அதேபோல் மாதவனும் அட்டகாசமான கருப்பு உடையில் வந்து தனக்கான விருதை பெற்றுக்கொண்டார். அவர்களைத் தொடர்ந்து தேவிஸ்ரீ பிரசாத், கீரவாணி ஆகியோரும் தங்களுக்கான விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

அல்லு அர்ஜுன் கலக்கலான வெள்ளை நிற குர்தாவில் வந்து தனது விருதை பெற்றுக்கொண்டார். மேலும் கங்குபாய் கத்தியாவாடி படத்தில் நடித்ததற்காக ஆலியா பட் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை சந்தன நிற சேலை அணிந்தபடி வந்து விருதை பெற்றுக்கொண்டார்.


Click it and Unblock the Notifications











