ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? சூர்யாவின் அர்ப்பணிப்பு, உழைப்பு வீணாகாது.. ரசிகர்கள் குஷி!
சென்னை: சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் கங்குவா. பிரம்மாண்டமான பொருட் செலவில், 16 மொழிகளில் வெளியான இத்திரைப்படம் கடுமையான விமர்சனத்தை சந்தித்து தோல்வியை தழுவியது. இந்த ஆண்டு நடைபெற உள்ள 97வது ஆஸ்கர் விருது போட்டியில் கலந்துகொள்ள கங்குவா படத்தை விண்ணப்பித்துள்ளனர்.
சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா, பாபி தியோல், யோகிபாபு ஆகியோர் நடித்த திரைப்படம் கங்குவா. கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக சோஷியல் மீடியாவில் அனைத்திலும் பேசப்பட்டு வந்த கங்குவா திரைப்படம் நவம்பர் மாதம் வெளியானது.

இந்த படம் வெளியாக முதல் நாளில் இருந்தே படம் மிகவும் மோசமான விமர்சங்களை சந்தித்து வந்தன. சூர்யாவின் உழைப்பு இரண்டு ஆண்டு வீணாகிவிட்டது, சிறுத்தை சிவா, சூர்யாவை வச்சு செய்துவிட்டார் என நெகட்டிவ் விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் பரவின.
சூர்யாவின் கங்குவா: மேலும், சூர்யாவின் கேரியரில் கங்குவா ஒரு மோசமான படம் என்ற விமர்சனத்தால், கடுப்பான ஜோதிகா, ஒரு காட்டமான அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், இந்த பதிவை சூர்யாவின் மனைவியாக இல்லை, ஒரு சினிமா ரசிகையாக எழுதுகிறேன். நிச்சயமாக முதல் 1/2 மணிநேரம் ஒலி இரைச்சலாக இருக்கிறது. கேமரா வேலைபாடுகள் தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காதவை. முதல் ஷோ முடிவதற்கு முன்பே கங்குவா படத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்மறை விமர்சனம். கங்குவா டீம் பெருமையாக இருங்கள், எதிர்மறையாக கருத்து தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்துவதற்கு வேறு எதையும் செய்யப்போவதில்லை என கருத்து தெரிவித்து இருந்தார்.
97வது ஆஸ்கர் விருது: இப்படி கங்குவா படத்தின் தோல்வியால், அந்த படம் குறித்து பல செய்திகள் வெளியாகி சூர்யா ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய நிலையில், தற்போது கங்குவா படத்தை 2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள 97வது ஆஸ்கர் விருது போட்டியில் கலந்துகொள்ள படக்குழு விண்ணப்பித்துள்ளது. இந்தியாவிலிருந்து மலையாளப் படமான 'தி கோட் லைப், கேர்ல்ஸ் வில் பி கேர்ல்ஸ் ஆகிய படங்களும் இந்த நாமினேஷனில் பங்கு கொள்கின்றன. இவ்வாறு உலகம் முழுவதும் இருந்து 323 படங்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. இதில், ஆஸ்கர் அகாடமி வகுத்துள்ள தகுதிகளை பெற்ற 207 படங்களின் பட்டியல் நேற்று வெளியானது. அந்த பட்டியலில் கங்குவா படமும் இடம்பெற்றுள்ளது. இது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ரசிகர்கள் மகிழ்ச்சி: ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் இந்தப் படங்கள் தேர்வாக அதிக வாக்குகளைப் பெற வேண்டும். அதற்கான வாக்களிப்பு ஜனவரி 8ந் தேதியான நாளை முதல் ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும். அதன்பின் எந்தெந்த படங்கள் போட்டிக்குத் தேர்வாகி உள்ளன என்பதை ஜனவரி 17ம் தேதி அறிவிப்பார்கள்.


Click it and Unblock the Notifications











