திருவள்ளுவர் பயோபிக்..பயபக்தியுடன் விரதம் இருக்கும் நடிகை!
சென்னை: திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் உருவாகி வரும் நிலையில், இப்படத்தில் திருவள்ளுவரின் மனைவி வாசுகியாக நடிக்கும் தனலட்சுமி, அந்த கதாபாத்திரத்திற்காக பயபக்தியுடன் விரதம் இருந்து வருகிறார்.
காமராஜ், மகாத்மா படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரித்து வரும் திரைப்படம் திருக்குறள். திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான இப்படத்தை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வழங்க, டி.பி.ராஜேந்திரனுடன் இணைந்து தயாரிக்கின்றனர். செம்பூர்.கே.ஜெயராஜ் திரைக்கதையை எழுதியுள்ளார். ஏ.ஜே. பாலகிருஷ்ணன் இயக்கி உள்ளார். இதில், வள்ளுவராக கலைச்சோழனும், வாசுகியாக தனலட்சுமியும், நக்கீரனாக சுப்ரமணிய சிவா, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர் என மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

கடும் விரதம்: இந்நிலையில், இப்படத்துக்காக வாசுகியாக நடிக்கும் தனலட்சுமி கடும் விரதம் இருந்து நடித்து வருகிறாராம். உலக பொதுமறையாம் திருக்குறளை உருவாக்கி தந்த திருவள்ளுவர் பற்றிய கதை இது. வாசுகியாக நடிப்பது என் பாக்கியம்.எனவே படப்பிடிப்பு தொடங்கியது முதலே விரதத்தையும், கடும் வழிபாட்டையும் மேற்கொண்டு வருகிறேன். அசைவ உணவுகள் உண்பது கிடையாது. படப்பிடிப்பு எப்போது முடியுமோ அப்போது என் விரதத்தை முடிப்பேன். சினிமாவில் எந்த கதாபாத்திரத்தையும் நடித்து விடலாம். ஆனால் வாழ்ந்து மறைந்த மேதைகளின் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது,அந்த கதாபாத்திரத்துக்கு உண்மையாக இருக்கவேண்டும். அந்த உண்மையை நான் காட்ட விரும்புகிறேன் என்றார்.
திருக்குறள் திரைப்படம்: மேலும் படம் குறித்து பேசிய . ஏ.ஜே. பாலகிருஷ்ணன் பைபிளுக்குப் பின்அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். அறத்தை வலியுறுத்த தோன்றிய நீதி நூல் என்றாலும் அது பிரச்சார இலக்கியமல்ல. கவித்துவமும், அழகியலும் மிக்க அற்புதப் படைப்பு. திரை மொழியிலும் இதைப் பிரதிபலிக்க முயற்சிக்கிறோம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழ் நாட்டையும் படத்தில் பதிவு செய்கிறோம். திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் திரையிடத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.


Click it and Unblock the Notifications











