மலையாள சினிமாவில் தலைவிரித்தாடும் பாலியல் சீண்டல்.. மோகன் லால் உட்பட கூண்டோடு ராஜினாமா!
கேரளா: மலையாள நடிகர் சங்கம் (அம்மா) தலைவர் பொறுப்பில் இருந்து முன்னணி நடிகர் மோகன்லால் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள திரைத்துறையில் நடிக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியில் பழம்பெரும் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்தக் கமிட்டி 60க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை அப்போதைய முதல்வர் பினராய் விஜயனிடம் அளித்தது.

ஹேமா கமிஷன்: ஆனால், இந்த அறிக்கை வெளியிடப்படாமல் 4 ஆண்டுகளாக இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டின் பேரில் சில தினங்களுக்கு முன் வெளியானது. அந்த அறிக்கை வெளியானதற்கு பின் பல நடிகைகள் தங்களுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக கூறிவருகின்றனர். அந்த வகையில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஸ்ரீலேகா மித்ரா என்ற நடிகை பிரபல டைரக்டரும், மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பரபரப்பு புகார் கூறினார்
அடுத்தடுத்த புகார்:அதைத்தொடர்ந்து, ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சித்திக் தனது பதவியை ராஜினாமா செய்தார். நடிகை மினு முனீர், மலையாள செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், நடிகர்கள் முகேஷ் மற்றும் ஜெயசூர்யா தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், இரு நடிகர்களும் தனித்தனி சந்தர்ப்பங்களில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக தெரிவித்து இருந்தார்.
கூண்டோடு ராஜினாமா: இப்படி மலையாள சினிமாவில் தொடர்ந்து பாலியல் ரீதியிலான புகார்கள் அதிகரித்து வரும் நிலையில். மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து முன்னணி நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். அவர் மட்டுமின்றி 17 நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். மலையாள திரைப்பட நடிகர்கள் சங்க நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்திருப்பது கேரளாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











