அரங்கம் அதிரட்டுமே.. கூலி இசை வெளியீட்டு விழா எப்போ தெரியுமா?.. ரஜினி என்ன பேசப்போறாரு?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதில் அவருடன் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர் என பலர் நடித்திருக்கிறார்கள். பட ரிலீஸுக்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில்; படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் அவரது பெயரை டேமேஜ் செய்துவிட்டது. பிளாஷ்பேக் போர்ஷனை எல்லாம் வைத்து செய்துவிட்டார்கள் ரசிகர்கள். எனவே அடுத்த படத்தில் அந்த டேமேஜை எப்படியாவது சரி செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார். அப்படிப்பட்ட நிலைமையில்தான் ரஜினிகாந்த்துடன் முதன்முறையாக கூட்டணி வைத்திருக்கிறார் லோகி.
கூலி ரஜினி: ரஜினிக்கும் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் சுமார் ரகத்தில்தான் சேர்ந்தது. எனவே லோகேஷுடன் இணைந்திருக்கும் கூலி படம் மெகா ஹிட்டாக வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருக்கிறார். கண்டிப்பாக இது மெகா ஹிட்டாகி 1000 கோடி ரூபாயை வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெயரை பெறும் என சூப்பர் ஸ்டார் மற்றும் லோகேஷ் கனகராஜின் ரசிகர்க கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
லோகியின் நம்பிக்கை: லோகேஷை பொறுத்தவரை 1000 கோடி ரூபாய் வசூல் குறித்து தான் கொடுக்கும் பேட்டிகளில் பெரிதாக பேசுவதில்லை. அதேசமயம் டிக்கெட்டுக்கு கொடுக்கும் பணத்துக்கு படம் வொர்த்தாக அமையும் என கூறிவருகிறார். மேலும் படம் ரிலீஸான பிறகு தாய்லாந்துக்கு சென்றுவிடுவேன்; இந்த நம்பர் விவகாரத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என அவர் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட்டில் ரிலீஸ்: படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதுவரை படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் முதலில் வெளியான இரண்டு பாடல்கள் சுமார் வரவேற்பையும், மூன்றாவதாக வெளியான பாடல் சூப்பர் வரவேற்பையும் பெற்றிருக்கின்றன. இந்நிலையில் கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகஸ்ட் 2ல் ஆடியோ வெளியீட்டு விழா: அதன்படி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஆகஸ்ட் இரண்டாம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே இயக்குநர் கொடுத்த ஒரு பேட்டியில், "ரஜினியிடம் நான் கமல் ரசிகர் என்று சொன்னேன். அதற்கு அவரோ, 'உங்களை நான் ஆடியோ வெளியீட்டு விழாவில் பார்த்துக்கொள்கிறேன்' என கூறியதாக கூறியிருந்தார். எனவே இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் எப்படி பேசப்போகிறார், என்ன பேசப்போகிறார் என்பதபி பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











