Maamannan Audio Launch - மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழா அசத்தல் அப்டேட்.. ரஜினியும், கமலும் வருவார்களா?
சென்னை: Maamannan Audio Launch(மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழா) மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நடித்திருக்கும் மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு ஜூன் ஒன்றாம் தேதி நடக்கவிருக்கிறது.
இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்து பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. காதலையும், அதன் ஊடாக நடக்கும் சாதிய அட்டூழியங்களையும் பொட்டில் அடித்தாற்போல் படம் பேசியிருந்தது.

கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ்: படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் படத்திலேயே மாரி செல்வராஜ் தான் எவ்வளவு தேர்ந்த படைப்பாளி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும், சென்சிட்டிவ் விஷயத்தை தொட்டு அதை மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக அந்தப் படம் முடியும்போது அவர் வைத்த க்ளைமேக்ஸ் ஷாட் படம் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று மாரி செல்வராஜ் மீது பலரது கவனத்தை திருப்பியது. பாரதிராஜாவே அந்த ஷாட்டை பாராட்டியிருந்தது கவனிக்கத்தக்கது.
மாரியின் கர்ணன்: முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளத்தில் எளிய மக்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் நடத்திய அராஜகத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் ஹிட்டானாலும் பரியேறும் பெருமாளில் இருந்த அடர்த்தி இந்தப் படத்தில் இல்லை என்ற விமர்சனத்தையும் சந்தித்தது. அப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இருப்பினும் இரண்டு படங்களிலேயே மாரி செல்வராஜ் முன்னணி இயக்குநராகிவிட்டார்.

மாமன்னன்: இப்படிப்பட்ட சூழலில் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதில் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இதில் வடிவேலுவுக்கு முக்கியமான கதாபாத்திரம் என்றும், வழக்கமான பாணியில் வடிவேலு இதில் இருக்கமாட்டார் என்றும் படத்தின் போஸ்டர்களை பார்க்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது. படத்தின் இரண்டு சிங்கிள்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழா: உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஜூன் 1ஆம் தேதி பிரமாண்டமாக நடத்தவிருப்பதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று மாரி செல்வராஜ் தனது முகநூல் பக்கத்தில் மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழா ஜூன் ஒன்றாம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கிறது என அறிவித்திருக்கிறார்.

ரஜினி, கமல்: இதற்கிடையே இந்த விழாவில் ரஜினிகாந்த்தையும், கமல் ஹாசனையும் கலந்துகொள்ள வைக்க உதயநிதி ஏற்பாடு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் இருவரும் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதாக தெரிகிறது. எனவே அவர்கள் வருவார்களா என்ற சந்தேகமும் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. இருப்பினும் உதயநிதியின் கடைசி படம் இது என்பதால் நிச்சயம் அவர்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











