நார்வே தமிழ் திரைப்பட விழா.. விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன்.. முழு விவரம்
நார்வே: 14ஆவது நார்வே தமிழ் திரைப்பட விழாவுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பொன்னியின் செல்வன் பல விருதுகளை பெற்றுள்ளது. விருது பெற்றவர்களின் முழு விவரம்
நார்வே நாட்டில் வருடா வருடம் சர்வதேச தமிழ் திரைப்பட விழா நடக்கிறது. இதில் நடுவர் குழுவானது சிறந்த படங்களையும், கலைஞர்களையும் தேர்வு செய்து விருதுகள் வழங்கும். அதன்படி 14ஆவது நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழா ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கிறது. தற்போது விருதுகள் பெறும் தமிழ் திரைப்படங்கள், கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 20 திரைப்படங்கள்
இந்த சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் மொத்தம் 20 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. அதன் விவரம் பின்வருமாறு:
பொன்னியின் செல்வன், விக்ரம், திருச்சிற்றம்பலம், சர்தார், லவ் டுடே, மாமனிதன், இரவின் நிழல், டான், நட்சத்திரம் நகர்கிறது, அனல் மேலே பனித்துளி, விசித்திரன், ராகெட்ரி, வெந்து தணிந்தது காடு, கார்கி, சாணிக்காயிதம், கடைசி விவசாயி, சில நேரங்களில் சில மனிதர்கள், உடன்பால், விட்னஸ், செம்பி.

விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன்:
நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறந்த இயக்குநருக்கான விருது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியதற்காக மணிரத்னத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பொன்னியின் செல்வன் படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கும், சிறந்த பாடலாசிரியருக்கான விருது பொன்னி நதி பார்க்கணுமே பாடலுக்காக இளங்கோ கிருஷ்ணனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர், நடிகைக்கான விருது
சிறந்த நடிகருக்கான விருது பொன்னியின் செல்வன் மற்றும் சர்தாரில் நடித்ததற்காக கார்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த நடிகைக்கான விருது கார்கி படத்தில் நடித்ததற்காக சாய்பல்லவிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சர்தார் படம் மித்ரன் இயக்கத்திலும், கார்கி படம் ஹரிஹரன் ராஜுவின் எழுத்திலும், கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்திலும் வெளிவந்தது.

மற்ற கலைஞர்களுக்கான விருதுகள்
சிறந்த திரைக்கதைக்கான விருது விக்ரம் படத்துக்காக லோகேஷ் கனகராஜுக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருது திருச்சிற்றம்பலம் படத்தில் மேகம் கருக்காதா பெண்ணே பாடலை பாடிய தனுஷுக்கும், சிறந்த பின்னணி பாடகிக்கான விருது வெந்து தணிந்தது காடு படத்தின் மல்லிப்பூ பாடலை பாடிய மதுஸ்ரீக்கும், சிறந்த குணசித்திர நடிகருக்கான விருது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த பத்மனுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது சாணிக்காயிதம் ஒளிப்பதிவாளர் யாமினிக்கும், சிறந்த நடன அமைப்பாளருக்கான விருது பீஸ்ட் படத்துக்காக ஜானி மாஸ்டருக்கும், சிறந்த எடிட்டருக்கான விருது விக்ரம் படத்துக்காக பிலோமின் ராஜுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. விருதுகள் வழங்கும் விழா ஏப்ரல் 29ஆம் தேதி நடக்கவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











