டாடா, லியோ.. அடுத்தடுத்து வாரிசை களமிறக்கும் அர்ஜுனன் - ஆச்சரியத்தில் கோலிவுட்
சென்னை: டாடா படத்திலும், லியோ படத்திலும் பிரபல நடிகர் அர்ஜுனன் தனது வாரிசுகளை அடுத்தடுத்து களமிறக்கியிருப்பதால் தமிழ் திரையுலகம் ஆச்சரியத்தில் இருக்கிறது.
கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடித்திருக்கும் படம் டாடா. சில நாள்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் பலரது வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நீண்ட நாள்கள் கழித்து ஒரு ஃபீல் குட் படம் பார்த்த உணர்வு வருகிறது என ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் படத்துக்கு பாஸிட்டிவ் விமர்சனங்கள் கொடுக்கின்றனர்.

கவினுக்கு பிரேக் கொடுத்த டாடா
விஜய் டிவியின் சீரியல்களில் நடித்துவந்த கவினுக்கு திரையுலகில் எந்த திருப்புமுனையும் நிகழாமல் இருந்தது. இதனையடுத்து பிக்பாஸில் கலந்துகொண்டார். அதிலிருந்து வெகுஜனங்களிடம் எளிதாக கனெக்ட் ஆனார் கவின். இருப்பினும் சொல்லிக்கொள்ளும்படியாக திரைப்படங்கள் அவருக்கு அமையவில்லை. லிஃப்ட் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் பெரிதாக கவினுக்கு எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. இப்படிப்பட்ட சூழலில் டாடா வெளியாகி கவினுக்கு பெரும் திருப்புமுனையை கொடுத்திருக்கிறது.

ராஜ்கமல் தயாரிப்பில் கவின்
டாடா படத்தின் வெற்றியைவிடவும், படத்தில் கவினின் நடிப்பு பலரால் பேசப்படுகிறது. அதனைத் தொடர்ந்து உலக நாயகன் கமல் ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றார் கவின். அதுமட்டுமின்றி ராஜ்கமல் புரொடக்ஷனில் கவின் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டாடாவில் கவினின் மகன் யார்?
கல்லூரி மாணவன் குழந்தைக்கு தகப்பனாக வேண்டிய சூழல் உருவாவதை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் கவினின் மகனாக வரும் சிறுவனும் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றான். இந்தச் சூழலில் அந்த சிறுவன் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த சிறுவன் பிரபல நடிகரான அர்ஜுனனின் மகன் ஆவார்.

வாரிசுகளை களமிறக்கும் அர்ஜுனன்
டாடா படத்தில் கவினுக்கு மகனாக நடித்திருக்கும் சிறுவன் அர்ஜுனனின் மகன் ஆவார். அவரது பெயர் இலன். இலன் மட்டுமின்றி அர்ஜுனனின் மகளான இயலும் திரைத்துறையில் நுழைந்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்தில்தான் இயல் நடிக்கிறார். இப்படி அடுத்தடுத்து தனது வாரிசுகளை திரைத்துறையில் இறக்கியிருக்கும் அர்ஜுனனை பார்த்து திரையுலகினர் ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்.

வாரிசுகளை களமிறக்கும் அர்ஜுனன் யார்?
பாலாஜிமோகன் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான காதலில் சொதப்புவது எப்படி படம் மூலம் பிரபலமானவர் அர்ஜுனன். அதன் பிறகு தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் இவர் டிக் டிக் டிக், O2, ஓ மை கோஸ்ட், நித்தம் ஒரு வானம், என பல படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











