'லியோ' அடுத்தடுத்து சிக்கல்..கிரிமினல் அஃபென்ஸ்.. டிரைலரை வெளியிட்ட தியேட்டருக்கு நோட்டீஸ்!
சென்னை: லியோ படத்தின் டிரைலரை வெளியிட்ட திரையரங்கு உரிமையாளர்களுக்கு சென்சார் போர்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ரத்தான இசைவெளியீட்டு விழா: லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை விஜய்யின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. விழா ரத்தானதால், சோகத்தில் இருந்த ரசிகர்களை குஷிப்படுத்த, படக்குழு லியோ படத்தின் டிரைலரை வெளியிட்டது.
விஜய் இப்படி பண்ணலாமா: டிரைலர் வெளியான சற்று நேரத்திலேயே ஒரு மில்லியன் பார்வைகளை கடந்து சமூக ஊடகங்களில் டிரெண்டானது. இது ஒருபுறமிருக்க, மற்றொரு பக்கம் டிரைலரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை குறித்து ஊடகம் மற்றும் சோஷியல் மீடியாவில் பெரும் விவாதமே எழுந்தது. குழந்தைகள், பெண்கள் என பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கும் விஜய் பெண்களை அவமதிக்கும் வகையில் இதுபோன்ற கெட்ட வார்த்தையை பேசலாமா எனப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
சர்ச்சையான பாடல்: முன்னதாக லியோ படத்தின் முதல் பாடலான நான் ரெடி தான் வரவா பாடலில், புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது சர்ச்சைக்குள்ளானது. உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், இதுபோன்ற காட்சிகளில் நடித்தால் அது, சமூகத்திற்கு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் கண்டித்திருந்தனர்.

சென்சார் போர்டு நோட்டீஸ்: இந்நிலையில், லியோ படத்தின் டிரைலரை வெளியிட்ட திரையரங்குகளுக்கு சென்சார் போர்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், திரையரங்குகளில் திரைப்படத்தையோ, டிரைலரையோ அல்லது விளம்பரங்களையோ வெளியிடுவதற்கு முன்பு சென்சார் போர்டின் தணிக்கை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும், லியோ டிரெய்லர் தணிக்கை சான்றிதழ் பெற்றிராத நிலையில், எப்படி அதை திரையில் வெளியிட்டீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் தணிக்கை சான்றிதழ் இல்லாமல் டிரைலரை வெளியிட்டது கிரிமினல் அஃபென்ஸ் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











