நானும் இளையராஜாவும் அடிச்சுக்குவோம் சேந்துக்குவோம்- உருகும் எஸ்.பி. பாலசுப்ரமணியன்
சென்னை: இளையராஜாவுக்கும் எனக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை சிறியதுதான். இருவரும் அதை எப்போதோ மறந்து விட்டோம். நட்புக்குள் சண்டை வரத்தான் வேண்டும். அப்படி சண்டை போட்டால் தான் உண்மையான நண்பன் என்று பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நண்பேன் டா என்று உரிமையுடன் சொல்லும் கெத்து இளையராஜாவிடம் சிலருக்கு மட்டும் தான் இருக்கு. அப்படிப்பட்ட நண்பர்கள் வாழ்க்கையில் சில எதிர்பாராத சூறாவளிகள் வீசின. அதை எல்லாம் கடந்து தான் நட்பு பலப்படும் என்று புரிய வைத்து இருக்கிறார்கள் இளையராஜாவும் எஸ்.பி.பாலசுப்பிரமணியனும்.

இந்த நண்பர்கள் சில மாதங்களாக பேசிக்கொள்ளாமல் இருந்த நிலையில் உன்னை கட்டிப்பிடிக்கணும்போல இருக்குடா, என்று சொல்லி ராஜா தன்னை அழுத்தமாக கட்டிப்பிடித்துக்கொண்டதாகச் சொல்கிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா ஆகிய 3 பேரும் ஐதராபாத்தில் நவம்பர் 3ஆம் தேதி நடக்கும் இசை நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பாட உள்ளனர். இதையொட்டி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது இளையராஜா தனது பாடல்களை பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தாரே, அவருடன் மோதல் தீர்ந்து விட்டதா, என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இப்படி ஒரு கேள்வி கேட்டவுடன் கொஞ்சம் கூட கோபிக்காமல் நிதானமாக பதில் சொன்னார் எஸ்.பி.பி.
இளையராஜாவுக்கும் எனக்கும் இடைவெளி என்பது ஒருபோதும் இல்லை. அவர் எப்போது அழைத்தாலும் போவதற்கு நான் தயாராகவே இருப்பேன். அவர் அழைத்தார். நான் போனேன். முன்பு மாதிரியே சேர்ந்து பணியாற்றினோம். ஒரு குடும்பத்தில் இருக்கிறவர்கள் இடையே சிறு மனஸ்தாபங்கள் வரும். பிறகு சரியாகி விடும். மீண்டும் இணைந்து விடுவார்கள். அதுமாதிரி தான் எங்களுக்கும் நடந்தது.

இருவரும் சில நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்றோம். அவர் இசையமைப்பில் சமீபத்தில் 2 பாடல்களை பாடினேன். ஒரு பெரிய மரத்தை புயல் வந்து சாய்த்து விட்டு போய் விடும். ஆனால் அருகம்புல் எப்போதும் சாயாமல் அப்படியே இருக்கும். நான் என்னை ஒரு அருகம்புல் மாதிரிதான் நினைக்கிறேன் என்று உவமானம் காட்டி பேசினார் எஸ்.பி.பி.
இளையராஜாவுக்கும் எனக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை சிறியதுதான். இருவரும் அதை எப்போதோ மறந்து விட்டோம். நட்புக்குள் சண்டை வரத்தான் வேண்டும். அப்படி சண்டை போட்டால் தான் உண்மையான நண்பன். பிரபலங்கள் வாழ்க்கை, சராசரி மனிதனின் வாழ்க்கை என்று எதுவும் இல்லை. எல்லா நட்பும் சண்டை போடத்தான் செய்யும். நல்ல நட்பு கண்டிப்பாக ஒன்று சேரும்.


Click it and Unblock the Notifications











