RRR படத்தை பாராட்ட ஜேம்ஸ் கேமரூனுக்கு பணம்..? ஆஸ்கர் விருதுக்காக பல கோடி... தொடரும் சர்ச்சை!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ராஜமெளலி இயக்கிய RRR திரைப்படம் கடந்தாண்டு மார்ச் 24ம் தேதி வெளியானது.
ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான RRR சர்வதேச அளவில் பல விருதுகளை வென்று வருகிறது.
இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள ஆஸ்கர் விழாவில் RRR படத்துக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே RRR படத்தை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீபன் ஃபீல்பெர்க் ஆகியோருக்கு பணம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

விருதுகளை வாரி குவிக்கும் RRR
ராஜமெளலியின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸான RRR, சர்வதேச அளவில் விருதுகளை வென்று வருகிறது. கடந்தாண்டு மார்ச் மாதம் ரிலீஸான இந்தப் படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய்தேவ் கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடிக்கும் மேல் வசூலித்த RRR, கோல்டன் குளோப், கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்ட், ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அவார்ட் உட்பட பல விருதுகளை வென்றுள்ளது.

ஆஸ்கர் நாமினேஷனில் RRR
இதனைத் தொடர்ந்து ஆஸ்கர் போட்டியிலும் RRR படத்துக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்பதற்காக RRR படக்குழுவினர் அமெரிக்காவில் தங்கியுள்ளனர். ஆஸ்கர் நாமினேஷனில் உள்ள நாட்டு நாட்டு பாடல் உள்பட ஐந்து பாடல்களும் விழா மேடையில் பெர்பாமன்ஸ் செய்யப்பட உள்ளன. முன்னதாக ஆஸ்கர் விருதுக்காக RRR படக்குழு 80 கோடிக்கும் மேல் செலவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

தொடரும் பப்ளிசிட்டி சர்ச்சை
ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து RRR திரைப்படம் தேர்வாகவில்லை. தயாரிப்பு தரப்பில் இருந்தே தனியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளது. அதனால், 80 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்துதான் RRR படத்தை ஆஸ்கர் விழாவில் பப்ளிசிட்டி செய்ததாக சொல்லப்படுகிறது. நடிகர் ராம் சரணும் ஆஸ்கர் விருது எங்களுக்கு ஒலிம்பிக் பதக்கம் போன்றது எனக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது RRR படத்தை பாராட்ட ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீபன் ஃபீல்பெர்க் இருவருக்கும் பணம் கொடுக்கப்பட்டதாக அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது.

விடாமல் துரத்தும் சர்ச்சை
சில மாதங்களுக்கு முன்னர் ஹாலிவுட் இயக்குநர்கள் ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீபன் ஃபீல்பெர்க் ஆகியோரை சந்தித்தது குறித்து நெகிழ்ச்சியாக பேசியிருந்தார் ராஜமெளலி. அப்போது அவர்கள் இருவருமே RRR படத்தின் மேக்கிங்கை பாராட்டியதாக செய்திகள் வெளியாகின. மேலும், அவர்கள் RRR மேக்கிங் ஹாலிவுட் ரேஞ்சில் இருப்பதாக பாராட்டியிருந்தனர். அதுமட்டும் இல்லாமல் ஹாலிவுட்டில் படம் இயக்க ஆசை இருந்தால் சேர்ந்து செய்யலாம் என் ராஜமெளலியிடம் ஜேம்ஸ் கேமரூன் சொன்னதாகவும் தகவல் வெளியானது.

பணம் பெற்றுகொண்டு பாராட்டு
அதேநேரம், ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீபன் ஃபீல்பெர்க் இருவரும் பணம் பெற்றுகொண்டு தான் RRR படத்தை பாராட்டியதாக அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது. இந்த குற்றாச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என RRR சப்போர்ட்டர்ஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாளை ஆஸ்கர் விருது விழா நடைபெறவுள்ள நிலையில், இப்படியான சர்ச்சைகள் வைரலாகி RRR படத்தை ட்ரெண்டாக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications











