Chinmayi :வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய டெலிவரிபாய்..பொங்கி எழுந்து ஆதரவுக்கரம் நீட்டிய சின்மயி!
சென்னை : வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் டெலிவரி பாய் அத்துமீறி நடந்து கொண்டது குறித்து உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடகி சின்மயி ட்வீட் செய்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடலை பாடி சினிமாவில் அறிமுகம் ஆனார்.
அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

பாடகி சின்மயி : மீ டூ விவகாரம் குறித்து பல கருத்துக்களை தெரிவித்து வரும் சின்மயி, தற்போது பல பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அடிமைத்தனம், பெண்கள் சுதந்திரம் போன்ற பெண்கள் தொடர்பான விஷயங்களுக்கு சுதந்திரமாக கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
அத்து மீறிய டெலிவரி பாய் : சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் டெலிவரி பாய் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும், அந்த புகாரை சென்னை காவல்துறை அதிகாரிகளையும் டேக் செய்துள்ளார். சென்னையைச் சேர்ந்த இளம் பெண் தன் வீட்டிற்கு தேவையான மளிகை சாமான் பொருட்களை ஆன்லைன் தளத்தில் ஆர்டர் செய்துள்ளார்.
சமையல் அறையில் நுழைந்தார் : இதையடுத்து டெலிவரி பாய் வீட்டிற்கு அனைத்து பொருட்களையும் எடுத்து வந்துள்ளார். கதவை திறந்த அந்த பெண் அருகில் இருந்த மேஜை மீது அந்த பொருட்களை வைக்கும்படி கூறி உள்ளார். ஆனால், டெலிவரி பாய் நான் இதை சமையல் அறையில் வைத்துவிடுகிறேன் என்று கூறி சமையல் அறைக்கு சென்றுள்ளார்.
செல்போன் கேட்டு தொல்லை : அப்போது அந்த பெண் தனியாக இருப்பதை தெரிந்த கொண்ட டெலிவரி பாய், அந்த பெண்ணின் அருகே வந்து, உன் போன் நம்பரை சொல்லு என்று மிரட்டியது மட்டுமில்லாமல், அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதையடுத்து, அந்த பெண் சத்தம் போட்டு கத்தி உள்ளார். இது எதையுமே பொருட்படுத்தாத டெலிவரி பாய் தொடர்ந்து அந்த பெண்ணின் தோள் மீது கை வைத்து, செல்போன் நம்பர் மட்டுமே வேண்டும் என கேட்டுள்ளார்.

ட்விட்டரில் புகார் : இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட அந்த பெண் தனது தோழிக்கு போன் செய்துள்ளார். இதையடுத்து அந்த டெலிவரி பாய் வெளியே ஓடி உள்ளார். இந்த சம்பவத்தால் பதறிப்போன அந்த பெண், அந்த ஆன்லைன் தளத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.ஆனால், அனைத்தையும் கேட்டு விட்டு, அவரை பணியில் இருந்து எடுத்துவிடுகிறோம் என்று மட்டும் கூறியுள்ளனர்.
சின்மயி ஆதரவு : இதனால், ஆத்திரம் அடைந்த அந்த பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த இளம் பெண்ணின் புகாரை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்து, வீட்டில் கூட பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை என்றும், இந்த இளம் பெண்ணுக்கு நியாயம் வேண்டும் என்றும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக பொங்கி எழுந்து குரல் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











