ஏஆர் ரஹ்மானுக்குப் பிறகு ஆஸ்கர் வென்ற MM கீரவாணி... இந்த விருதில் இருக்கும் வித்தியாசம் தெரியுமா?
சென்னை: 2023ம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இதில் ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல், சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது.
முன்னதாக 2009ல் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஏஆர் ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றிருந்தார்.
ஏஆர் ரஹ்மான், கீரவாணி இருவரும் ஒரே பிரிவில் ஆஸ்கர் விருது வென்றிருந்தாலும், அதிலும் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர்
2023ம் ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. டால்பி தியேட்டரில் நடைபெற்ற இதில், ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் இந்தப் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. கோல்டன் குளோப் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வென்ற இந்தப் பாடல், தற்போது ஆஸ்கரையும் தட்டித் தூக்கியுள்ளது. இசையமைப்பாளர் MM கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் இருவரும் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர்.

ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு பாராட்டு
இதனையடுத்து கீரவாணி, இயக்குநர் ராஜமெளலி உள்ளிட்ட ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 15 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு சென்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படம், இறுதியாக நாட்டு நாட்டு பாடலுக்கு மட்டும் விருது வென்றது. ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய்தேவ் கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த ஆர்ஆர்ஆர் கடந்தாண்டு வெளியாகியிருந்தது. முன்னதாக ஆஸ்கர் மேடையில் நாட்டு நாட்டு பாடல் லைவாக பெர்ஃபாமன்ஸ் செய்யப்பட்டது.

இரண்டு விருதுகளுடன் ஏஆர் ரஹ்மான்
RRR படத்திற்காக இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருது வென்றது பெருமைக்குரிய தருணமாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் 2009ம் ஆண்டே இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியிருந்தார். டேனி பாயல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக சிறந்த பின்னணி இசை, 'ஜெய்ஹோ' சிறந்த பாடல் என இரு பிரிவுகளில் ஏஆர் ரஹ்மானுக்கு விருது கிடைத்தது. இந்நிகழ்வு இன்றளவும் இந்தியத் திரையுலகில் மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதுதான் வித்தியாசம்
ஏஆர் ரஹ்மான், கீரவாணி இருவருமே சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்றாலும், அதில் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது. ஸ்லம்டாக் மில்லியனர் படம் முழுக்க இந்தியாவில் படமாக்கப்பட்டாலும், அது ஹாலிவுட் கேட்டகிரியில் வெளியானது. அதனால், மிக எளிதாக சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. ஆனால், ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் இந்தியத் திரைப்படமாக ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியது. அதன்படி, ஏஆர் ரஹ்மான் ஹாலிவுட் படத்தின் இசையமைப்பாளராகவும், MM கீரவாணி இந்திய மொழிப் படத்தின் இசையமைப்பாளராகவும் ஆஸ்கர் விருதை வென்றுள்ளனர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
அதேநேரம் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஏஆர் ரஹ்மான் விருது பெற்ற ஜெய்ஹோ பாடல், இந்திய திரையிசையின் மரபில் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகமொத்தம் ரஹ்மானின் ஜெய்ஹோவும், MM கீரவாணியின் நாட்டு நாட்டு பாடலும் இந்திய இசைப் பின்னணியில் உருவாகி ஆஸ்கர் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை இசை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











