Vaadivaasal : வாடிவாசலும் அப்படிப்பட்ட படம் தான்.. இயக்குநர் தமிழின் சுவாரஸ்ய பேட்டி!
சென்னை : வெற்றிமாறனின் வாடிவாசலும் இப்படிப்பட்ட படமாகத்தான் இருக்கும் என்று இயக்குநர் தமிழ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
விடுதலை திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியானதை அடுத்து படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்று வரும் நிலையில், டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ், இப்படத்தில் முக்கிய போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கற்பனையாக கதை உருவாக்க முடியாது
இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இயக்குநர் தமிழ் விடுதலை படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், விடுதலை திரைப்படத்தின் கதை கற்பனையாக இருந்தாலும் பல உண்மை சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது என விடுதலை படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர். கற்பனையாக ஒரு கதையை உருவாக்கவே முடியாது, வாழ்க்கையில் நடந்த சில அனுபவங்கள், நாம் பார்த்த சில பிரச்சனைகளை வைத்துத்தான் கற்பனையான கதையை உருவாக்க முடியும். அப்படி போராளிகளுக்கான களத்தில் இருந்து, இப்படி ஒரு கதையை வெற்றி மாறன் எடுத்திருக்கிறார்.

போராடும் குணம் கொண்டவர்கள்
கலியபெருமாள், தமிழரசன் போன்றவர்கள் வரலாற்றில் இருட்டடிக்கப் பட்டவர்களை வெற்றி மாறன் விடுதலை படத்தின் மூலம் மீண்டும் உயிர் கொடுத்து இருக்கிறார். இன்றை தலைமுறையினர் கலியபெருமாள், தமிழரசன் வரலாற்றை தேடிப் படிக்கிறார்கள் என்றால் அது வெற்றிமாறனுக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றிதான். தமிழர்கள் எப்போதுமே தனது மொழிக்காவும் மரபுக்காவும் போராடும் குணம் கொண்டவர்கள் என்பதை வெற்றிமாறன் கிளைமாக்ஸ் காட்சியில் தெளிவாக கூறி இருக்கிறார்.

படம் இப்படித்தான் இருக்கும்
வெற்றி மாறனின் முந்தைய படங்களைப் போல இந்த படத்திலும், பெண்களை நிர்வாணப்படுத்தி போலீசார் டார்ச்சர் செய்வது போல காட்டப்பட்டிருக்கிறது. வெற்றிமாறனே என்னடா தொடர்ந்து போலீசை குறைசொல்லும் வகையிலே படம் எடுத்து வருகிறோம் சிங்கம் படம் போல போலீசை புகழும் படி படம் எடுக்க வேண்டும் என்று பல முறை சொல்லி இருக்கிறார். ஆனால், மக்கள் பக்கம் நிற்கவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால், யார் எதிராக இருக்கிறார்களோ அவர்களை அடையாளப்படுத்தித்தான் ஆக வேண்டும்.

வாடிவாசலும் அப்படிப்பட்ட படம் தான்
வெற்றிமாறனின் எந்த கதையை எடுத்துக்கொண்டாலும், தமிழர்களின் அறம் சார்ந்தும், தமிழர்களின் வரலாற்று பற்றியதாகத்தான் இருக்கும். வெற்றி மாறனின் அடுத்த படமான வாடிவாசலும் தமிழர்களை போற்றும் படமாகத்தான் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. சினிமாவிற்காக வெற்றிமாறன் இவ்வாறு படம் எடுக்கிறார் என்று சொல்லிவிட முடியாது ஏன் என்றால் அவருடைய படிப்பு, ஆளுமை, சித்தாந்தம், கம்யூனிச கோட்பாடு, இடதுசாரி சிந்தனை போன்றவை அவரிடம் அதிகம் இருக்கும் என்பதால், அதன் தாக்கம் அவரின் படங்களில் அதிகமாக இருக்கும்.

சொல்லமுடியாத கஷ்டம்
விடுதலைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டரை வருடத்திற்கு மேலாக நடந்தது. அங்குபட்ட கஷ்டத்தை எல்லாம் வாயால் சொல்லிவிட முடியாது அந்த அளவுக்கு காடு, மலை என அனைத்து இடத்திற்கும் நான்கு மணி நேரம் நடந்தே சென்றோம் அந்த காட்சி எல்லாம் இரண்டாம் பாகத்தில் வரும். அட்டைப்பூச்சி, உன்னி உடம்பு முழுக்க ஏறி கடிக்கும். ஆனால், அப்படி கஷ்டப்படும் போதெல்லாம் ஒரு படைப்புக்காக இப்படி கஷ்டப்படுவதில் தவறு இல்லை என்று நினைத்தோம். இன்று மக்களின் கொண்டாட்டத்தை பார்க்கும் போது மனதிற்கு இதமாக இருக்கிறது என்று இயக்குநர் தமிழ் கூறினார்.


Click it and Unblock the Notifications











