Tamannaah - இந்தியாவின் ஷகீராவா தமன்னா?.. அவரே பகிர்ந்த வீடியோவை பாருங்க
சென்னை: Tamannaah (தமன்னா) காவாலா பாடலுக்கு தமன்னா ஆடும் நடனத்துக்கு ஷகீரா ஆடிய வக்கா வக்கா பாடலை எடிட் செய்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இதில் மோகன் லால்,சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பான் இந்திய படமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் படம் உருவாகியிருக்கிறது. கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இருக்கும் படங்களில் ஜெயிலரும் ஒன்று.

கட்டாய ஹிட்: ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகிய இரண்டு பேருக்குமே ஜெயிலர் படம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்னதாக ரஜினி நடித்த தர்பார், அண்ணாத்த படங்களும் நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படமும் தோல்வியடைந்தன. எனவே இந்தப் படத்தின் மூலம் இரண்டு பேருமே கட்டாயமாக ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றனர்.
ஃபர்ஸ்ட் சிங்கிள்: இந்தச் சூழலில் ஜெயிலர் படம் பற்றிய எதிர்பார்ப்பு இருந்தாலும் சென்சேஷனல் டாக் எதுவும் எழாமல் இருந்தது. ஆனால் அதனை மாற்றிக்காட்டியிருக்கிறது படத்திலிருந்து வெளியாகியிருக்கும் காவாலா என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள். ஷில்பா ராவ் பாட அருண்ராஜா காமராஜா பாடலை எழுதியிருக்கிறார். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். பாடல் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்கள் எங்கும் காவாலா பற்றிய பேச்சுக்களும், ரீல்ஸ்களும், மீம்ஸ்களும்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன.
தமன்னா நடனம்: எப்போதும் ரஜினி படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகிறது என்றால் முழுக்க முழுக்க ரஜினிதான் ரசிகர்களால் அதிகம் பேசப்படுபவர். காவாலா பாடலின் நிலையே தலைகீழாக இருக்கிறது. முழுக்க முழுக்க அந்தப் பாடலில் தமன்னாவின் ராஜ்ஜியமே இருக்கிறது. கிளாமரான உடையோடு, வளைந்து நெளிந்து அவர் ஆடுவதை பார்த்த ரசிகர்கள் டோட்டலாக ஃப்ளாட் ஆகினர்.

பறந்த மீம்ஸ்கள்: இதன் காரணமாக கடைசி சில நொடிகளில் வரும் ரஜினியை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதுமட்டுமின்றி இந்தப் பாடலில் ரஜினி வருவதை வைத்து பல மீம்ஸ்களையும் ரசிகர்கள் பறக்கவிட்டுக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும் இது தமன்னாவுக்கான பாடல் எனவே அவரது ஆட்சி இருக்கிறது. படத்தை பாருங்கள் முழுக்க முழுக்க தலைவரின் ரூல்தான் இருக்கும் என்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.
இந்திய ஷகீரா: இந்நிலையில் காவாலா பாடலில் தமன்னா ஆடும் நடனத்துக்கு உலக அளவில் புகழ் பெற்ற ஷகீரா பாடி ஆடிய வக்கா வக்கா (Wakka Wakka) பாடலை எடிட் செய்து ஒரு ரசிகர் வீடியோ வெளியிட்டு இந்தியன் ஷகீரா என குறிப்பிட்டுள்ளார். இதனை ரீட்வீட் செய்திருக்கும் தமன்னா, ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். இந்த சிங்க் அற்புதமாக இருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











