twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அவனவனுக்கு எது வருதோ அதை மட்டும் பண்ணுங்கடா..!'

    By Shankar
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    யார்க்கு எதெது கைவருகின்றதோ அதைச் செய்தால் போதும். நமக்குரிய மேன்மை தானாய்ப் பின்னால் வரும். இவர்களெல்லாம் செய்யும்போது நானும் செய்ய முடியாதா என்ன என்னும் குருட்டுத் துணிச்சலில் ஒன்றைக் கையிலெடுத்தவர்கள் அதை விடவும் முடியாமல் வெல்லவும் முடியாமல் "உள்ளதும் போச்சடா..." என்று ஓய்ந்து அமர்வார்கள். அப்போதுதான் அதுவரை தம்மைக் கைவிடாது காத்து வந்த இயற்கைத் திறமையும் தனது கூர்மையிழந்து போனதை உணர்வார்கள்.

    எல்லாத்துறையிலும் இத்தகையோரைக் காணலாம். இதை அகலக்கால் வைத்தல் என்றும் சொல்லலாம். நீங்கள் குதிரைப்படையில் வெல்ல முடியாத வீரர் என்றால் உங்களால் யானைப்படையிலும் அதே வல்லமையோடு செயலாற்ற முடியும் என்று நம்புவது பேதைமை. குதிரையை ஆள்வதும் யானையை ஆள்வதும் வேறு வேறு. குதிரையும் யானையும் ஒரே போரின் இரண்டு வகைப் படைகள்தாமே என்று இரண்டிலும் பேராற்றல் பெறுவது எளிதில்லை. தண்ணீரில் உள்ள ஆற்றல் தரையில் இருப்பதில்லை. அவரவர்க்கு என்று வாய்த்து மிளிர்ந்த துறையில் ஈடுபாட்டோடும் பற்றோடும் தொடர்ந்து செல்வதே அறிவுடைமை.

    The fall of top celebrities

    தொழில் துறையிலாகட்டும் கலைத்துறையிலாகட்டும், இயற்கையான வளர்ச்சி கெட்டுப்போய்த் தொலைந்து போனதற்கு அவர்கள் இன்னொரு தளத்தில் முயன்று கால்வைத்ததுதான் காரணமாக இருக்கின்றது. அப்படி எண்ணற்ற நிறுவனங்கள் காணாமல் போயிருக்கின்றன. சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் தான் செய்துகொண்டிருந்த வேலைக்கு நேர் எதிரான கட்டுமானத்துறையில் கால்வைத்ததுதான் அதன் வீழ்ச்சிக்கு முதற்சுழியாய் அமைந்தது என்பார்கள். மேடாஸ் இன்ப்ரா என்ற கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கி அதற்கும் இதற்குமான பணமாற்றங்களில் சிக்கிச் சீரழிந்ததுதான் அதை மூழ்கிய கப்பலாக்கிற்று. இதற்கு எடுத்துக்காட்டுகளாக, நம்முன்னேயே பலர் உயரத்திலிருந்தும் வீழ்ந்திருக்கிறார்கள்.

    திரைப்படத்தில் புகழ்பெற்றிருந்த கலைஞர்கள் உருத்தெரியாமல் வீழ்ச்சியடைந்ததையும் வரலாறு பார்த்துக்கொண்டே இருக்கிறது. நாடறிந்த பெரிய நடிகர்கள் தமக்குத் தொடர்பில்லாத திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டபோது நிலைகுலைந்து போனார்கள். ஒரு நடிகராகத் தொடர்ந்து சம்பளம் பெற்றுக்கொண்டிருப்பது ஒரு கட்டத்திற்கு மேல் உவப்பூட்டக்கூடிய ஒன்றாக இருப்பதில்லை. நம்மை வைத்துத்தானே இந்தப் படமுதலாளி கொள்ளை கொள்ளையாய்ச் சேர்த்துவிட்டார் என்று எப்படியோ நினைத்துவிடுகிறார்கள். ஒரேயொரு படம் தமது வாழ்க்கையைப் பொன்னொளி பரவியதாக்கிவிடும் என்று நம்பி எடுக்கின்றார்கள். நடிக்கத் தெரிந்த கலை மனப்பாங்குக்கு முற்றிலும் எதிரானது வணிக மனப்பாங்கு. அந்த நேரடி மாற்றத்திற்கு முகங்கொடுக்க முடியாமல் தோல்வியைத் தழுவுகிறார்கள்.

    The fall of top celebrities

    தமிழ்த்திரைப்பட வரலாற்றில் தன்னேரில்லாத் தனிப்பெரும் நடிகையராக வலம் வந்தவர் சாவித்திரி. நவராத்திரி என்ற திரைப்படத்தில் ஒன்பது வேடங்களில் சிவாஜி கணேசன் தனித்தனியாகத் தம் நடிப்பாளுமையைக் காட்டுவார். அந்த ஒன்பது வேடங்களோடும் உரையாடி இணையான நடிப்பை வெளிப்படுத்தி நேர்நிற்க வேண்டிய வேடம் சாவித்திரிக்கு. ஒன்பது சிவாஜிகளையும் தம் ஒற்றைத் தனி வேடத்தைக்கொண்டே ஈடுகொடுத்து நடித்திருப்பார். அதனாற்றான் மாற்று எண்ணமே இல்லாமல் அவரை 'நடிகையர் திலகம்' என்றார்கள். ஆனால், அவருடைய நலவாழ்க்கை வீழ்ச்சியடைந்ததற்கு அவர் 'பிராப்தம்' என்ற திரைப்படத்தை எடுக்கத் துணிந்ததே காரணம் என்பார்கள். "என்னைக் கேட்காமல் எப்படி நீ சாவித்திரிக்குப் படம் செய்து தர ஒப்புதல் அளித்தாய் ?" என்று ஜெமினி கணேசன் சிவாஜியிடம் வருத்தப்பட்டதாய்ச் சொல்வார்கள். சிவாஜியே நடித்திருந்தும் பிராப்தம் திரைப்படம் படு தோல்வியடைந்து சாவித்திரியின் திரைவாழ்க்கையை முடிவுக்குக் கொணர்ந்தது. ஒருவேளை சாவித்திரியின் வாழ்க்கையில் பிராப்தம் என்ற படமே இல்லாதிருந்தால், அவருடைய செம்மாந்த தனித்தகைமை எத்தகைய சீர்கேட்டுக்கும் ஆளாகியிருக்காது. இன்று வரையிலும்கூட அவருடைய கலைப்பயணம் தொடர்ந்திருக்கலாம்.

    எஸ்.வி. சுப்பையா என்ற மிகச்சிறந்த நடிகரை அறிந்திருப்போம். சிறிய வேடத்தில் நடித்தாலும் அந்தத் தோற்றத்தை மறக்க முடியாதபடி தனித்தன்மையோடு நடித்துக் கொடுப்பவர். எஸ்.வி. சுப்பையா, எம்.ஆர். இராதா, டி.எஸ். பாலையா, எஸ்.வி. ரங்காராவ் - இந்நால்வரில் ஒருவரேனும் ஒரு பழைய படத்தில் நடித்திருந்தார் எனில் அப்படத்தைச் செந்தகைமைகள் மிகுந்த செவ்வியல் திரைப்படங்களாகக் கருதலாம். அவர்கள் பங்காற்றும் வேடத்தால் அத்திரைப்படத்திற்கு அப்படியொரு சிறப்பைத் தோற்றுவித்திருக்கிறார்கள்.

    திரையுலகின் கள்ளங்கபடங்களை அறியாதவரான எஸ்.வி. சுப்பையா சொந்தமாய் ஒரு படமெடுக்கத் துணிந்து நலம்வளம் இழந்தவரானார். கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் பாரதியாராக ஒரேயொரு காட்சியில் தோன்றினாலும் நம் கண்முன்னே அந்த மகாகவியை பார்வை உடல்மொழி சொல்லாற்றல் என அப்படியே நிறுத்திக் காட்டிய நடிப்பாற்றலுக்குச் சொந்தக்காரர். ஒரேயொரு திரைப்படத்தைத் தயாரிக்கும் முயற்சியில் எல்லாவற்றையும் இழந்தார். தாம் படமெடுக்கும் முடிவில் இருப்பதை ஏவி மெய்யப்பச் செட்டியாரிடம் மரியாதையின் பொருட்டுச் சொல்வதற்காகச் சென்றாராம். அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்புச்சியார், "அம்முயற்சியைக் கைவிடுக... வேண்டவே வேண்டா..," என்று கேட்டுக்கொண்டாராம். தாமும் படமெடுத்து முதலாளியாகிவிடுவோம் என்ற காழ்ப்பில் இவ்வாறு கூறுகிறார் என்று நினைத்ததாகச் சொல்கிறார் சுப்பையா. ஆனால், இறுதியில் அவர் உண்மையை உணர்ந்தவர் ஆனார். ஆனால், எல்லாம் கையை விட்டுப் போய்விட்டன. வீழ்ச்சியடைந்தவர்க்கு ஒரு வாய்ப்பாக 'நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற...' என்ற பாடலில் தோன்றச் செய்தார் எம்ஜிஆர்.

    ஒரு திரைப்படத்தில் நடிக்கவோ இயக்கவோதான் ஒவ்வொருவரும் தொடக்கத்தில் விரும்புவார். அது நிறைவேறியதும் படத்தயாரிப்பில் அன்னார் ஈடுபடுவார். படத்தயாரிப்பில் ஈடுபட்டவுடனே அவர் கலைமகளின் நிழலிலிருந்து வெளியேறி திருமகளின் காலடியில் விழுகின்றார். கலைமகளோடு இருக்கும்வரையில் திருமகளுக்குப் பிடித்தமானவராகத்தான் இருப்பார். ஆனால், கலையிழந்த மக்களை எந்தத் திருமகளும் விரும்புவதுமில்லை. உடன் வருவதுமில்லை. அவரவர்க்கென்று ஒரு திறமை இருக்கும். அதைப் பற்றி நின்றாலே போதும். வரவேண்டியவை அனைத்தும் வரவேண்டிய நேரத்தில் வரிசை கட்டி வரும். கவுண்டமணி கூறியதுதான் நினைவுக்கு வருகிறது: "அவனவனுக்கு எது வருதோ அதை மட்டும் பண்ணுங்கடா..!"

    English summary
    An artcile about the fall of top celebrities in Tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X