சர்ச்சைகளால் தாமதமா? சமந்தா நடித்துள்ள வெப் தொடர் ரிலீஸ் எப்போது? இயக்குனர்கள் தகவல்!
மும்பை: சமந்தா நடித்துள்ள வெப் தொடர், கோடை காலத்தில் வெளியாகும் என்று அதன் இயக்குனர்கள் கூறியுள்ளனர்.
அமேசான் பிரைமில் வெளியாகி வரவேற்பை பெற்றத் தொடர், 'தி ஃபேமிலி மேன்'. இதில் மனோஜ் பாஜ்பாய் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
பிரியாமணி, ஷரிப் ஹஸ்மி, நீரஜ் மாதவ் உட்பட பலர் நடித்திருந்த இந்த தொடர் ஹிட்டானது.

இரண்டாவது சீசன்
இந்தி பட இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இதை இயக்கி இருந்தனர். இப்போது இதன் இரண்டாவது சீசன் தயாராகி உள்ளது. இதில் சமந்தா நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த தொடர் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. பின்னர் பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

ஆச்சரிய கேரக்டர்
இந்த தொடரில் நடித்தது பற்றி பேட்டி அளித்திருந்த நடிகை சமந்தா, 'இதில் நான் பல விதிகளை உடைத்திருக்கிறேன். புதிதாகப் பல விஷயங்களைப் சோதித்துப் பார்த்திருக்கிறேன். என்னை ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் இந்த கேரக்டர் ஆச்சரியமானதாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

ஆக்ஷன் காட்சிகள்
இதில் அவருக்கு அதிரடியான ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதை படத்தின் இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே கூறும்போது, இந்தப் படத்துக்காக சமந்தாவிடம் பேசினோம். அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது என சொன்னோம். அவர் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார் என்றனர்.

சர்ச்சை எழுந்தது
இந்நிலையில், இந்த தொடரின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. அமேசானில் வெளியான 'தாண்டவ்' வெப் சீரிஸில் இந்து தெய்வங்களை அவதூறாக சித்தரித்ததாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா உட்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மிர்ஸாபூர் சிக்கல்
இதே போல அமேசானில் வெளியான மிர்ஸாபூர் என்ற சீரிஸும் சிக்கலை சந்தித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள மிர்ஸாபூர் நகரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த வெப் சீரிஸில் அந்த நகரின் இமேஜை கெடுக்கும் விதமாக எடுக்கப்பட்டிருப்பதாகப் புகார் அளிக்கப்பட்டது.

அமேசான் பிரைம்
இதனால், சமந்தா நடித்துள்ள 'தி ஃபேமிலிமேன் 2' வெப் சீரிஸின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அதன் இயக்குனர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுபற்றி இன்ஸ்டாவில் அவர்கள், 'இந்த தொடரை காண நீங்கள் ஆவலுடன் இருப்பது தெரியும். தொடர் அமேசான் பிரைமில் வரும் கோடை காலத்தில் வெளியாகும் என்று கூறியுள்ளனர்.

கோடை காலத்தில்
இந்த தொடருக்காகக் கடுமையாக உழைத்துள்ளதாகவும் கண்டிப்பாக இந்த தொடர் உங்களால் விரும்பப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், கோடை காலத்தில் வெளியாகும் தேதியையும் என்ன காரணத்துக்காக, ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர்கள் குறிப்பிடவில்லை.


Click it and Unblock the Notifications