இளையராஜாவிடம் கையெடுத்து கும்பிட்ட தனுஷ்... விடுதலை முதல் பாடல் பதிவில் நடந்த சுவாரஸ்யம்!
சென்னை: வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாகவும், சூரி கதாநாயகனாகவும் நடித்துள்ளனர்.
விடுதலை படத்தின் முதல் பாகத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இந்நிலையில், இந்தப் பாடல் பதிவின் போது இளையராஜா - தனுஷ் இடையே நடந்த சுவாரஸ்யமான நிகழ்வின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

வெற்றிமாறனின் விடுதலை
அசுரன் படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். வழக்கமாக ஜிவி பிரகாஷுடன் கூட்டணி வைக்கும் வெற்றிமாறன், முதல்முறையாக இளையராஜாவுடன் இணைந்துள்ளார். இந்நிலையில், விடுதலை படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இளையராஜா இசையில் தனுஷ்
விடுதலை படத்தின் முதல் பாகத்தில் இருந்து இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. முக்கியமாக இந்தப் பாடலை தனுஷ் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இளையராஜா இசையில் தனுஷ் பாடிய முதல் பாடலாக இது உருவாகியுள்ளது. ஒன்னோட நடந்தா எனத் தொடங்கும் இந்தப் பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட வீடியோவை ப்ரோமோவாக வெளியிட்டது படக்குழு.

இளையராஜாவிடம் கையெடுத்து கும்பிட்ட தனுஷ்
ஒன்னோட நடந்தா பாடலின் முதல் ப்ரோமோ வீடியோவை நேற்று இளையராஜா தனது டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார். அதில் தனுஷுக்கு எப்படி பாடுவது என சொல்லிக் கொடுக்கும் இளையராஜா, அவரை கிண்டல் செய்தது ரசிகர்களையே வியப்பில் ஆழ்த்தியது. அதாவது இளையராஜா முன் பாட தனுஷ் தயக்கம் காட்ட, "உங்கிட்ட இருந்து எதாவது வாங்கணும்ல..." என கலாய்த்தபடி பாடலை பாடி காட்டுகிறார் இளையராஜா. இந்த ப்ரோமோ வீடியோவில் வெற்றிமாறனும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது இளையராஜாவிடம் தனுஷ் கையெடுத்து கும்பிடும் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

நாளை காலை 11 மணிக்கு
தனுஷ் பாடியுள்ள ஒன்னோட நடந்தா பாடலின் முதல் ப்ரோமோ வீடியோ ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோ வீடியோ இன்னும் ஹைலைட்டாக அமைந்துள்ளது. அதில் ஸ்டூடியோ உள்ளே தனுஷுக்கு சில திருத்தங்கள் கூறுகிறார் இளையராஜா. அப்போது "உன் துணைக்கு நான் தான்.. என் துணைக்கு நீதான்" என்ற வரிகளை தனுஷ் பாடும் போது, இளையராஜா அதனை இது நமக்கான வரி என சுட்டிக் காட்டுவதை போல செய்கை செய்கிறார். இதனைப் பார்த்த தனுஷ் உடனே இளையராஜாவை கையெடுத்து கும்பிடும் காட்சி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ப்ரோமோ வீடியோவே ட்ரெண்டாகி வரும் நிலையில், நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் விடுதலை முதல் பாடலை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











