முதன்முறையாக கமலுக்கு வில்லன்… நிறைவேறுமா லோகேஷ் கனராஜ்ஜின் கனவு?: மன்சூர் அலிகானுக்கு ஜாக்பாட்
சென்னை: 90களின் பிரபலமான வில்லனாக தமிழ் திரையுலகை மிரட்டியவர் மன்சூர் அலிகான்.
சமீபத்தில் காமெடி கேரக்டரில் நடித்து வரும் மன்சூர் அலிகான், லோகேஷ் கனகராஜ்ஜுக்கு மிகவும் பிடித்த நடிகர்.
மன்சூர் அலிகானை எப்படியாவது தனது படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என ஆர்வமாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

கோலிவுட்டை மிரட்டிய மாஸ் வில்லன்
தமிழ் திரையுலகில் ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான வில்லன்கள் அறிமுகமாகியுள்ளனர். அவர்களில் சிலர் மட்டுமே வித்தியாசமான உடல்மொழியுடன் ரசிகர்களை மிரட்டியுள்ளனர். அப்படி முக்கியமானவர்களில் மன்சூர் அலிகானும் ஒருவர். விஜய்காந்தின் 100வது படமான 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் வீரபத்திரன் என்ற கேரக்டரில் நடித்து அசர வைத்தார். சிறந்த நடிகராக இருந்தாலும், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதில் கெட்டிக்காரர் இந்த மன்சூர் அலிகான்.

வித்தியாசமான வில்லத்தனம்
கேப்டன் பிரபாகரன் படத்தில் மன்சூர் அலிகானின் வித்தியாசமான வில்லத்தனத்தை பார்த்த இயக்குநர்கள், அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளை வழங்கினர். தலையை அடிக்கடி வெட்டிவெட்டி இழுத்துக் கொள்வதோடு, டயலாக் டெலிவரியிலும் நக்கலும் நய்யாண்டியும் கலந்து வியக்க வைப்பார் மன்சூர் அலிகான். இதனால், இவரது வில்லத்தனத்தை வேடிக்கைப் பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் அதிகமானது.

லோகேஷ் கனகராஜ்ஜின் ஃபேவரைட் வில்லன்
செம்பருத்தி, அதிரடிப்படை, மக்கள் ஆட்சி, நட்புக்காக என பல படங்களில் வில்லனாக மிரட்டியுள்ள மன்சூர் அலிகான், ரஜினியின் 'படையப்பா' படத்திலும் சின்ன சீனில் வில்லனாக கலக்கியிருப்பார். இந்நிலையில், தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ்ஜுக்கு, மன்சூர் அலிகான் தான் ஃபேவரைட் வில்லனாம். இதுபத்தி, 'விக்ரம்' படத்தின் வெற்றிக்குப் பின்னர் தான் கொடுத்த பல பேட்டிகளில் பேசியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

தளபதி 67ல் பிஸியான லோகேஷ் கனகராஜ்
மேலும், எப்படியாவது மன்சூர் அலிகானை தனது படத்தில் வில்லனாக நடிக்க வைத்துவிட வேண்டும் என்பதே லோகேஷ் கனகராஜ்ஜின் மிகப் பெரிய கனவாக இருக்கிறது. தற்போது விஜய்யுடன் 'தளபதி 67' படத்தில் இணைந்துள்ளார் லோகேஷ். இந்தப் படம் அவரின் 'லோகி யுனிவர்ஸ்; பின்னணியில் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கமல் நடிப்பில் 'விக்ரம்' படத்தின் அடுத்த பாகத்தையும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ்ஜின் கனவு
'தளபதி 67' படத்திலேயே விஜய்க்கு வில்லனாக மன்சூர் அலிகான் நடிக்கலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கமலுடன் லோகேஷ் இணையும் புதிய படத்தில், மன்சூர் அலிகானை நடிக்க வைக்க லோகேஷ் கனராஜ் திட்டமிட்டுள்ளாராம். மன்சூர் அலிகானும் இதுவரை கமலுடன் இணைந்து நடித்ததில்லை. அதனால், இந்தக் கூட்டணி நிச்சயம் முடிவாகும் எனவும், லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகான் இருவரது கனவும் நிறைவேறும் என்றும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











