கண்கலங்க வைக்கும் மயில்சாமியின் இறுதிப்பயணம்.. தேம்பி அழும் திரை பிரபலங்கள்!
சென்னை : மாரடைப்பால் உயிரிழந்த மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு கதறி அழுது வருகின்றனர்.
தீவிர சிவபக்தரான மயில்சாமி, மகா சிவராத்திரி தினமான நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து பாதுகாப்பாக கொண்டுவரப்பட்ட உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது.

மயில்சாமி மறைவு
அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ரஜினி, மயில்சாமி என்னுடைய நெடுங்கால நண்பர். அவரை 23, 24 வயது இருக்கும்போதே எனக்கு தெரியும். மிமிக்கிரி ஆர்டிஸ்டா இருந்து அதற்கு பிறகு சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்தார்.

ரஜினி அஞ்சலி
மயில்சாமியின் இழப்பு தற்செயலாக நடந்தது இல்லை, அது சிவனின் கணக்கு. தன்னுடைய தீவிர பக்தனை அவருக்கு உகந்த நாளில் அழைத்துச் சென்றுவிட்டார். அவருடைய குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. அவர்களுடைய வாரிசுகளுக்கு சினிமா துறையில் நல்ல ஒரு எதிர்காலம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் என்றார்.

திரண்டு வந்த திரைப்பிரபலங்கள்
விஜய்காந்த் உடல்நிலைசரியில்லாமல் இருப்பதால், விஜய்காந்தின் மகன் விஜய பிரபாகரன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும், நாசர், கார்த்திக், ஜெயம் ரவி,சத்யராஜ், சித்தார்த், பால சரவணன், இயக்குநர் லிங்குசாமி, தாடி பாலாஜி, கூல் சுரேஷ், நடிகை ரேகா என ஏராளமான திரைப்பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

கதறி அழுத பிரபலங்கள்
இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடு காலையில் இருந்து முழுவீச்சில் நடைபெற்ற நிலையில், தற்போது இறுதி ஊர்வலம் சிவ வாத்தியங்கள் முழங்க நடைபெற்று வருகிறது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பிரபலங்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு கதறி அழுதபடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மயில்சாமியின் இறுதி ஊர்வலம் செல்லும் வழி நெடுகிலும் மக்கள் கண்ணீர் வடித்தனர். சென்னை வட பழனியில் உள்ள ஏ.வி.எம் மயானத்தில் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











