“தி கிரே மேன்“ படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம்..அதிருப்தியில் ரசிகர்கள் !
சென்னை : நடிகர் தனுஷ் தி கிரே மேன் படத்தில் நடித்ததற்காக வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட நடிகர்களுள் ஒருவர் தனுஷ். நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என மாஸ் ஹீரோவாக இருக்கிறார்.
திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில், திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படம் அடுத்த மாதம் 18ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார்.

தி கிரே மேன்
கேப்டன் அமெரிக்கா பட வரிசையில் இரண்டு படங்கள், அவெஞ்சர்ஸ் பட வரிசையில் இரண்டு படங்களை இயக்கி, ஹாலிவுட்டில் முன்னணி இயக்குநர்களாகத் திகழ்ந்து வரும் இயக்குநர்கள் இணை ஆண்டனி மற்றும் ஜோ ருஸ்ஸோ. ருஸ்ஸோ பிரதர்ஸ் என்று அழைக்கப்படும் இவர்களது இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'தி கிரே மேன்'.

தனுஷ் சிறந்த நடிகர்
ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகிய ஹாலிவுட்டில் டாப் நடிகர்களு தனுஷ் நடித்துள்ளதால் அவரின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். மேலும், தனுஷ் நம்பமுடியாத, சிறந்த நடிகர். நாங்கள் சண்டைக் காட்சி படமாக்கிய போதும், பல முறை ரீ ஷூட் செய்த போதும் அவர் ஒருமுறைகூட தவறு செய்யவில்லை என அவருடன் நடித்த ரியான் காஸ்லிங் தனுஷை பாராட்டி இருந்தார்.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில்
இந்தப் படத்தில் அவிக் சான் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 22-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி அமெரிக்காவில் திரையிடப்பட்டது. இதில் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் நடிகர் தனுஷ் கலந்துகொண்டார்.

சம்பளம்
இந்நிலையில், தி கிரே மேன் திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அதில், தனுஷ் இப்படத்தில் நடித்ததற்காக 5 லட்சம் அமெரிக்க டாலர்களை சம்பளமாக வாங்கியுள்ளாராம். இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட ரூ.4 கோடியாம். கோலிவுட் படங்களில் நடிக்க தனுஷ் 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நிலையில், ஹாலிவுட் படத்திற்காக இவ்வளவு குறைவான தொகையை சம்பளமாக பெற்றுள்ளது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











