தாதாசாஹேப் பால்கே விருது வென்ற தி காஷ்மீர் பைல்ஸ்... ட்ரெண்டாகும் விவேக் அக்னிஹோத்ரியின் ட்வீட்
மும்பை: கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் கடும் சர்ச்சைகளை சந்தித்தது.
விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இந்தப் படம் காஷ்மீரில் உள்ள இந்து பண்டிட்கள் பாதிக்கப்பட்டதன் பின்னணி குறித்து பேசியது.
ஆனால், இது வரலாற்றை திரித்துக் கூறப்படுவதாக சினிமா ஆர்வலர்களும் அரசியல் ஆய்வாளர்களும் விமர்சனம் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், 2023ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது விழாவில் சிறந்த படத்துக்கான விருதை வென்றுள்ளது தி காஷ்மீர் பைல்ஸ்.

தி காஷ்மீர் பைல்ஸ் சர்ச்சை
விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியான திரைப்படம் தி காஷ்மீர் பைல்ஸ். ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் 25 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 340 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை விடவும் கடுமையான சர்ச்சைகளை சந்தித்தது இந்தப் படம். காஷ்மீரில் வசித்துவரும் இந்து பண்டிட்கள் பாதிக்கப்பட்டதன் பின்னணியை காட்டும்விதமாக படமாக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் படம் வரலாற்றில் இல்லாத பல கட்டுக்கதைகளுடன் எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் விமர்சித்திருந்தனர்.

தாதாசாஹேப் பால்கே விருது
சினிமா விமர்சகர்களும், வரலாற்று ஆய்வளர்களும் தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர். அதிகளவில் விமர்சனங்களுடன் சர்ச்சைகளை சந்தித்த இந்தப் படம் தற்போது தாதாசாஹேப் பால்கே விருது வென்றுள்ளது. மும்பையில் நடைபெற்ற 2023ம் ஆண்டுக்கான தாதாசாஹேப் பால்கே விருது விழாவில், சிறந்த படத்துக்கான விருது தி காஷ்மீர் பைல்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, நடிகர் அனுபம் கெர் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

விவேக் அக்னிஹோத்ரி ட்வீட்
இதனையடுத்து, தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி விருதுடன் ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில், இந்த விருது பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். மேலும், என்னை ஆசிர்வதித்த இந்திய மக்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கப்படுவதாக பதிவிட்டுள்ளார். விவேக் அக்னிஹோத்ரியின் இந்த ட்விட்டர் பதிவுக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதேபோல், தொடர்ந்து இந்தப் படம் மீதும், அதற்காக வழங்கப்பட்ட தாதாசாஹேப் விருது குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனிடையே இந்தப் படத்தில் நடித்த அனுபம் கெர் சிறந்த நடிகருக்கான தாதாசாஹேப் பால்கே விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவா சர்வதேச திரைப்பட விழா
முன்னதாக கோவாவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற 53வது சர்வதேச திரைப்பட விழாவில், தி காஷ்மீர் பைல்ஸ் திரையிடப்பட்டிருந்தது. இதன் நிறைவு விழாவில் சர்வதேச போட்டிக்கான தேர்வுக் குழுவிற்கு இஸ்ரேலிய எழுத்தாளரும், இயக்குநருமான நடாவ் லாபிட் தலைமையேற்றார். அப்போது பேசியிருந்த அவர், "வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரசார படமான தி காஷ்மீர் ஃபைல்ஸ் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது எனக்கு அதிர்ச்சியும் குழப்பத்தையும் கொடுத்தது" எனக் கூறினார்.

சர்ச்சைகளை கடந்து விருது
மேலும், "தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இதுபோன்ற மதிப்புமிக்க திரைப்படவிழாவின் கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக இது எங்களுக்குத் தோன்றியது. விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்" என்று கூறியிருந்தார். இப்படியான பல சர்ச்சைகளை கடந்து தி காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு தாதாசாஹேப் பால்கே விருது கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











